பயணிகள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் 6 ஆயிரம் ரயில் நிலையங்களில் ‘வைஃபை’ வசதி நிறுவப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வேயில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சில திட்டங்கள் தனியாரின்பங்களிப்போடு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
‘ரயில் டெல்’ நிறுவனம்
இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ‘ரயில் டெல்’ மூலம்ரயில் நிலையங்களில் பயணிகளுக்காக ‘வைஃபை’ எனப்படும் இணைய வசதி சேவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 2016-ம் ஆண்டு மும்பை ரயில் நிலையத்தில் இந்த இணைய வசதி முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு, படிப்படியாக நாடுமுழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களிலும் ‘வைஃபை’ வசதி ஏற்படுத்தப்பட்டது.
பயணிகள் வரவேற்பு
ரயில் நிலையங்களில் உள்ள இந்த ‘வைஃபை’ வசதி, பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. டிக்கெட் முன்பதிவு, ரத்து உள்ளிட்ட ரயில்வே சார்ந்த சேவைகளைக்காட்டிலும், போட்டித் தேர்வு எழுதுவோர், மேற்படிப்புகளுக்கான தகவல்களை இணையதளத்தில் திரட்டவும், பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பிற சேவைகளுக்கும் இந்த வசதியை பயன்படுத்தி வருகின்றனர். முதல் 30 நிமிடங்களுக்கு இலவசமாக சேவை பெறலாம். அதன்பிறகு குறைந்த அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
‘ரயில் டெல்’ நிறுவனம் ஒவ்வொரு நாளும் சராசரியாக 3 ரயில் நிலையங்களில் புதியதாக இணைய வசதியை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, தற்போது 6 ஆயிரமாவது ரயில் நிலையமாக ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் நகர் ரயில் நிலையத்தில் ‘வைஃபை’ வசதி அமைக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பிரதான ரயில் நிலையங்களிலும், அடுத்தடுத்து உள்ள ரயில் நிலையங்களிலும் ‘வைஃபை’ அமைக்கும் பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை உட்பட இதுவரை 400-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் ‘வைஃபை’ வசதி உள்ளது. இது மற்ற ரயில் நிலையங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.