தமிழகம்

ஏர் பூட்டி உழுத காலம் பொற்காலம்: உலக விவசாயிகள் தினத்தில் விவசாயியின் அனுபவம்

கே.சுரேஷ்

விவசாயத்துக்காக ஏராளமான வேளாண் கருவிகள் வந்திருந்தாலும் மாடுகளைக் கொண்டு ஏர் பூட்டி உழுத காலமே பொற்காலம் என்கின்றனர், பழமையான பாரம்பரிய முறையைப் பின்பற்றி விவசாயம் செய்துவரும் விவசாயிகள்.

விவசாயத்தில் உழுவதில் தொடங்கி அறுவடை வரை முற்றிலுமாக தற்போது இயந்திரமயமாகியுள்ளது. மேலும், நாட்டில் உணவுப் பற்றாக்குறை வந்துவிடக்கூடாதென்பதற்காக அரசும் பல்வேறு சலுகைகளையும் அறிவித்துவருகிறது. இருந்தாலும் விவசாயிகள் சவாலாகவே விவசாயத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள வல்லவாரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி க.செல்வராஜ் (60) கூறியது:

வல்லவாரி மேற்கு கிராமத்தில் 400 குடும்பத்தினரிடமும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கவும், உழுவதற்கும் ஒரு ஜோடி காளை மாடுகள் இருந்தன. அதுவரை விவசாயிகள் யாரும் கடனாளியாகவும் இருந்ததில்லை.

தற்போது இதே கிராமத்தில் 20 குடும்பத்தில் மட்டும்தான் உழவு மாடு இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் காளை மாடுகளே இல்லாத கிராமங்களும் இருக்கிறது.

இதற்கு விவசாயம் முற்றிலும் இயந்திரமயமானதும் ஒரு காரணம். என்னிடம் ரூ.55,000 மதிப்புள்ள ஒரு ஜோடி காளைகள் உள்ளன. அவற்றின் உதவியுடன் ஒரு நாளைக்கு ஒரு ஏக்கர் உழவுப் பணி செய்தால் ரூ.600 கூலி கிடைக்கும். அதில் உழவு மாடுகளுக்கு தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டைக்காக ரூ.50, வைக்கோலுக்காக ரூ.50 நாளொன்றுக்கு செலவாகும். புல் கொடுத்தால் தீவனச்செலவு குறையும். எப்படியும் ரூ.500 லாபம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் மாட்டு வண்டியில் சுமை ஏற்றுவதன் மூலமும் வருமானம் கிடைக்கும்.

ஆனால், டிராக்டர் மூலம் ஒரு ஏக்கர் உழுவதற்கு சுமார் ரூ.700 கூலி கொடுக்க வேண்டும். அதில் ரூ.250-க்கு டீசல் செலவாகும். அதுதவிர மற்ற செலவுகளும் இருக்கிறது. ஆனால், மாடுகளுக்கு தீவனத்தைத்தவிர மற்ற செலவு இல்லை. மானாவாரியாக கடலை, உளுந்து போன்றவற்றை விதைக்க மாட்டு உழவுதான் சரியாக இருக்கும். காளை மாடும், வைக்கோல் போரும் விவசாயிகளின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

காளை மாடுகளை நம்பிய காலத்தில் விவசாயிகளிடம் உழைப்பு இருந்ததால் அவர்களிடம் நோய் இல்லை. நஞ்சு இல்லாத சாப்பாடு கிடைத்தது. அதோடு, விதை, உரம் விலை கொடுத்து வாங்கவில்லை. ஏர் உழவும் அப்படித்தான்.

அதனால்தான் பயிர் அழிந்தாலும் அதைப்பற்றி விவசாயிகள் கவலைப்படுவதில்லை. அரசும் அவ்வளவாக நிவாரணம் கொடுத்ததில்லை.

தற்போதெல்லாம் எல்லாவற் றையுமே விலை கொடுத்து செய்ய வேண்டியிருப்பதால் எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.

விவசாயிகளும் கடனாளியாக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதனால்தான் உழவு மாடுகளின் காலம் பொற்காலம் என்கிறோம். அதை நான் மட்டுமல்ல இந்த கிராமத்தில் காளைகளை நம்பியுள்ள விவசாயிகள் எல்லோரும் அனுபவித்துச் சொல்கிறோம். எதிர்காலம் என்னவாகப்போகிறதோ தெரியவில்லை என்றார் வேதனையுடன்.

SCROLL FOR NEXT