விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நேற்று முன்தினம் இரவு மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனக்குத் தானே பிரசவம் பார்த்து, நஞ்சுக்கொடியை கல்லால் துண்டித்துக் கொண்டு இருந்தார். உடனே, அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பெண்ணையும் பிறந்த ஆண் குழந்தையையும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் அன்புமணியை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறும்போது, "அந்த பெண் மனநிலை பாதிக்கப் பட்டு இருந்ததால் மிகவும் போராடியே அவருக்கு சிகிச்சை அளிக்க முடிந்தது. பிரசவமான தாய்மார்களுக்கு என்ன சிகிச்சை அளிக்க முடியுமோ அந்த சிகிச்சையை அளித்து அவரை விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தோம்" என்றார்.
மேலும், இது தொடர்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் ஜோதியிடம் கேட்டபோது, "அந்த பெண்ணுக்கு தமிழ் தெரியவில்லை. மேலும், அவர் பேசும் மொழி என்னவென்றே தெரிய வில்லை. எப்படியோ போராடி அப்பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். தற்போது அப்பெண் தன் பெயரை குமாரி என்று கூறியுள்ளார். பிறந்த குழந்தையை சிசு பராமரிப்பு பிரிவில் வைத்துள்ளோம். ஒருமுறை மட்டும் குழந்தைக்கு அப்பெண் தாய்பால் கொடுத்துள்ளார். தொடர்ந்து கொடுக்க மறுக்கிறார். அவரையும், குழந்தையையும் நேரடி கண்காணிப்பில் வைத்துள் ளோம்" என்றார்.
அந்த பெண்ணுக்கு உறவினர் என்று யாரும் இல்லாததால் சமூக நலத்துறையின் தொட்டில் குழந்தை திட்டத்தில் அந்த குழந்தையை சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் என மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.