தமிழகம்

புதுவை புதிய பேருந்து நிலையத்திற்கு கடைகள் மாற்றம்; ஆட்சியர் உத்தரவுக்கு பெரிய மார்க்கெட் வியாபாரிகள் எதிர்ப்பு: இன்று முதல் கடையடைப்பு நடத்த முடிவு

செய்திப்பிரிவு

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம், தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு காய்கறி கடைகளை மாற்றும் ஆட்சியர் உத்தரவை ஏற்க பெரிய மார்க்கெட் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று முதல் கடையடைப்பு நடத்தவும் முடிவு எடுத்துள்ளனர்.

புதுவையில் கரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் 1,500 பேருக்குதொற்று ஏற்படுகிறது. சராசரியாக 25 பேர் உயிரிழந்து வருகின்றனர். கரோனா தொற்று பரவலைத் தடுக்கஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் 24-ம்தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீன் அங்காடியை மூடிய மீனவர்கள்

இந்த பிரச்சினைக்கு மத்தியில், புதுவையில் அரசு எடுத்து வரும் கரோனா ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், ‘மீன் விற்பனை செய்ய வேண்டாம்’ என மீனவர்கள் ஒட்டு மொத்தமாக முடிவு செய்துள்ளனர். அதோடு பெரிய மார்க்கெட் மீன் அங்காடியை மூடியுள்ளனர். இதனால் பரபரப்புடன் காணப்படும் நேரு வீதி மீன் அங்காடி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், முத்தியால்பேட்டை, சோலை நகர், வம்பாகீரப் பாளையம், வாழை குளம், வீராம்பட்டினம், காலாப்பட்டு, அரியாங்குப்பம் போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்கள் ‘மீன் விற்பனை செய்ய வேண்டாம்’ எனவும் முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், புதுவை காந்தி வீதியில் உள்ள பெரியமார்க்கெட்டில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூடி பொருட்களை பெற்று வருவதாக புகார் எழுந்தது.கடந்த ஆண்டைப் போல தற்போதும் பெரிய மார்க்கெட்டை புதிய பேருந்து நிலையம், கிழக்கு கடற்கரை சாலை தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம் ஆகியவற்றுக்கு இடமாற்றம் செய்ய ஆட்சியர் பூர்வா கார்க் உத்தரவு பிறப்பித்துள்ளார். மொத்தம், சில்லரை, அடிக்காசு காய்கறி கடை வியாபாரிகள் இந்த இடங்களில் சமூக இடைவெளியோடு 17-ம் தேதி முதல் கடைகளை நடத்துவதை கண்காணிக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் ஆட்சியர் உத்தரவை ஏற்க பெரிய மார்க்கெட் வியாபாரிகள் மறுத்து விட்டனர். பேருந்துநிலைய வளாகத்தில் தங்கள்பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முடிவு எட்டப்பட வில்லை.

இதற்கிடையே, ‘இன்று முதல் பெரிய மார்க்கெட் காய்கறி மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகள் இயங்காது; முழு அடைப்பு நடத்துவோம்’ என்று புதுச்சேரி பெரிய மார்க்கெட் அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT