சென்னையில் குப்பைகளை அகற்றும் பணிகளில் அதிமுகவினர் ஈடுபடாதது ஏனென்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சென்னையில் குவிந்த குப்பைகளை அகற்றுவதற்காக வெளியூர்களில் இருந்து துப்புரவு பணியாளர்களை அழைத்து வந்துள்ளதாகவும், அவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
ஆனால், அரசு சொல்லும் துப்புரவுப் பணியாளர்கள் எண்ணிக்கைக்கும், களத்தில் உள்ள துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கைக்கும் பெரியளவு வித்தியாசம் உள்ளது. மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
தேமுதிகவினர் குப்பை அகற்றும் பணியை தொலைக்காட்சியிலும், செய்தித்தாள்களிலும் கண்ட பொதுமக்கள், தாங்களும் இப்போது வீதிக்கு வந்து குப்பைகளை சுத்தம் செய்கின்றனர். உங்களுக்கு வரும் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன் என்று கூறும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அதிமுகவினரை துப்புரவு பணியில் ஈடுபட சொல்லாதது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அரசின் இலவச பொருட்களை அரசு அதிகாரிகள் வழங்கும் போது அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பிக்கள், மேயர்கள், நிர்வாகிகள் என பலரும் முன்வரிசையில் நின்று, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு போஸ் கொடுக்கின்றனர். ஆனால், அந்த அக்கறையை துப்புரவு பணிகளில் காட்டவில்லை. அடுத்தவர்கள் கொண்டுவரும் நிவாரண பொருட்களில் முதல்வர் படம் ஒட்டுவதில் காட்டிய அக்கறையை துப்புரவு பணியில் காட்டாதது ஏன்?
மக்களை நேசிக்கின்ற தலைவர் யார் என்பதையும், மக்களுக்காக உழைக்கின்ற தலைவர் யார் என்பதையும், சொகுசான, சுகபோக வாழ்க்கை வாழ்பவர் யார் என்பதையும் தமிழக மக்கள் நன்கு தெரிந்துகொண்டனர். இனியும் அவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது. இது எல்லாவற்றுக்கும் மக்கள் தேர்தல் காலத்தில் பதில் சொல்வர்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.