வடசேரியில் கரோனா ஊரடங்கை மீறி திருமண நிகழ்ச்சி நடத்தியதால் திருமண மண்டபத்தை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டினர். 
தமிழகம்

குமரியில் ஊரடங்கு நாளில் அதிகமானோர் கூடியதால் திருமண மண்டபங்களுக்கு அபராதம்

செய்திப்பிரிவு

கன்னியாகுமரியில் கரோனா கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை 20 பேருக்கு மிகாமல் சமூக இடைவெளியுடன் நடத்த வேண்டும் எனவும், ஊரடங்கு காலத்தில் திருமண மண்டபங்களில் திருமண விழாக்கள் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித் திருந்தது.

இந்நிலையில் நேற்று குமரிமாவட்டத்தில் திருமண மண்டபங்களில் பரவலாக திருமணங்கள் நடைபெற்றன. நாகர்கோவில் வடசேரியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் கட்டுப்பாடுகளை மீறி அதிகமானோர் கூடியதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள், நகரமைப்பு அலுவலர்கள் கெபின்ஜாய், சந்தோஷ் ஆகியோர் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தடையை மீறி ஊரடங்கு நாளில் திருமணம் நடத்தியது கண்டறியப்பட்டது. திருமண மண்டப நிர்வாகிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வட்டாட்சியர் சுசீலா முன்னிலையில் மண்டபத்தை அலுவலர்கள் பூட்டினர். இதுபோல் குருந்தன்கோடு உட்பட பல பகுதிகளில் நடைபெற்ற திருமண விழாக்களில் அதிகமானோர் கூடியதையடுத்து திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக மாவட்டம் முழுவதும் இதுவரை 52,119 பேரிடம் இருந்து அபராதமாக ரூ.1 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரத்து 596 வசூலிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையுள்ள சோதனைச் சாவடிகள், காவல்கிணறு, ஆரல்வாய்மொழி சந்திப்பு மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT