வேலூர்-ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பிள்ளையார் குப்பம் பகுதியில் வாகனங்களில் வருபவர்கள் இ-பதிவு செய்துள்ளார்களா? என காவல்துறையினர் சோதனை செய்து மாவட்ட எல்லைக்குள் அனுமதித்து வருகின்றனர். படம்: வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

புதிய நடைமுறையால் சோதனை சாவடிகளில் இ-பதிவு இல்லாத வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு: காவல் துறையினர் நடவடிக்கை

செய்திப்பிரிவு

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிய இ-பதிவு நடைமுறையால் அனுமதி பெறாத வாகனங்களை காவல் துறையினர் திருப்பி அனுப்பினர். இதனால், நெடுஞ்சாலைகளில் வாகன நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

தமிழகத்தில் மாவட்டங் களுக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கெனவே வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர் களுக்கு இ-பதிவு கட்டாயம் என்பது நடைமுறையில் உள்ளது. தற்போது அரசின் புதிய அறிவிப் பால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையான கிறிஸ்டியான் பேட்டை, பொன்னை சோதனைச் சாவடி, பேரணாம்பட்டு அருகே பத்தலபல்லி சோதனைச் சாவடி, பரதராமி, சைனகுண்டா சோதனைச்சாவடிகளில் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து இ-பதிவு சான்று உள்ளதா? என்பதை சரிபார்த்த பிறகே அனுமதிக்கின்றனர். இ-பதிவு இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.

அதேபோல், அரசின் புதிய நடைமுறையை தொடர்ந்து வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகளில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கை யில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, வேலூர் மாவட்ட எல்லையான கண்ணமங்கலம், பிள்ளையார் குப்பம், மாதனூர், பேரணாம்பட்டு ஆகிய இடங்களில் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து சோதனை செய்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொன்னியம்மன் பட்டறை சோதனைச்சாவடி, பேரம்பாக்கம் சோதனைச்சாவடி, திருவாலங்காடு சாலை சோதனைச்சாவடி, திருத்தணி சாலை, சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகளை ஏற்படுத்தி தணிக்கை யில் ஈடுபட்டனர்.

இ-பதிவில் திருமணம், இறப்பு போன்றவற்றிற்கு இ-பதிவு செய்தவர்கள் மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டது. ஆனால், திடீரென இ-பதவில் இருந்து திருமணம் என்ற காரணத்தை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். காவல் துறையினர் சோதனைச்சாவடிகளில் இ-பதிவை சரிபார்த்த பிறகே அனுமதித்த காரணத்தால் நெடுஞ்சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் வெகு வாக குறைந்து காணப்பட்டது.

SCROLL FOR NEXT