சேலத்தில் ஒன்பது வயதுச் சிறுவன் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, தான் சேமித்து வைத்திருந்த ரூ.2,060-ஐ மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா நிவாரண நிதி கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, சேலம் சின்னதிருப்பதி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் - சரண்யா தம்பதியரின் ஒன்பது வயது மகன் சரண், ஆன்லைன் வகுப்புக்காக கையடக்க கணினி (டேப்) வாங்க உண்டியலில் ரூ.2,060 சேமித்து வைத்திருந்தார்.
கரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்க முதல்வர் கோரிக்கை விடுத்ததை அடுத்து, சரண் சேமித்து வைத்திருந்த ரூ.2,060 ரொக்கப் பணத்தை முதல்வர் கரோனா நிவாரண நிதிக்காக சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனிடம் நேற்று (மே 17) வழங்கினார்.
சிறுவனின் இந்த முயற்சிக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சிறுவன் சரண் கூறுகையில், "கரோனாவால் ஆக்சிஜன் இல்லாமல் உயிர்பலி அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு உதவியாக சேமித்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளேன்" என்றார்.