கரோனா பரிசோதனைகள் குறைவாக உள்ளதாகத் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், குழந்தைகளை கரோனா தாக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. கருப்பு பூஞ்சை நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் கரோனா தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை, மருந்துகள், ஆக்சிஜன், படுக்கைகள் இருப்பு குறித்து தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற பல இடங்களில் கரோனா மரணங்களின் எண்ணிக்கை குறித்து தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படுவதாகவும், ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாததால் மருத்துவமனைகள் அனுமதி மறுப்பதாகவும் சில மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கரோனா மரணம் குறித்து அருகிலிருக்கும் மக்களும், நோயாளிகளும் அச்சப்படுவதாகவும், உடல்கள் முறையாகக் கையாளப்படுவதில்லை எனவும் தெரிவித்தனர்.
அப்போது, குறைத்துக் காட்டப்படுகிறதா என விளக்கம் பெற்றுக் கூறுவதாகத் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுவதாகவும், ரெம்டெசிவிர் மருந்தை நேரடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
10 பேர் கொண்ட ஒரு மீனவர் குடும்பத்தில் 24 மணி நேரமும் எப்படிச் சிறிய வீட்டிற்குள் இருக்க முடியும் என்றும், பங்களா அல்லது சொகுசு வீடுகள் போல விஸ்தாரமாக இல்லாத வீடுகளில் வசிப்பவர்கள் தெருவில் அமர்ந்திருந்தால் அவர்களைக் காவல்துறையினர் துன்புறுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அதற்கு தமிழக அரசுத் தரப்பில், அவசியமில்லாமல் சாலையில் திரிபவர்கள் மீது வழக்குப் பதிவு மட்டுமே செய்யப்பட்டு வருவதாகவும், துன்புறுத்தல் கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மத்திய அரசுத் தரப்பில், ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் கோளாறுகளால் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஒரு மாதத்தில் தடுப்பூசி உற்பத்தியை 30 சதவீதம் அதிகரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், தமிழகத்தின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது, மருந்து மற்றும் தடுப்பூசி ஒதுக்கீடு குறைவாக உள்ளதா? எனக் கேள்வி எழுப்பியபோது, 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகளை ஒதுக்குவதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டியதுடன், புதுச்சேரியில் பாதிப்பு அதிகரிப்பதற்கு ஏற்ப படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டினர். கரோனா பாதிப்பு மற்றும் மரணம் குறித்து ஐ.சி.எம்.ஆர். மற்றும் உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்படி சரியான நியாயமான புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டுமென என பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டினர்.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று சில நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், கரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டும் குற்றச்சாட்டில், யாரையும் குறைகூறப் போவதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனாலும் ஐ.சி.எம்.ஆர்., உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்களின்படி, பாதிப்பு மற்றும் இறப்பு விவரங்கள் முழுமையாகப் பதியப்பட வேண்டுமென அறிவுறுத்தினர்.
தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளை விற்பனை செய்தால், அதன் விலையை அரசு கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். தடுப்பூசி சப்ளை போதுமான அளவில் இல்லாததால் தடுப்பூசி முகாம்களைத் தொடங்குவது ஸ்தம்பித்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், டொசிலூசூமா மருந்து இறக்குமதியை நம்பி இருப்பதால், மாற்றாக உள்ள உள்நாட்டு மருந்துகளான எக்சாமெதோசோன் உள்ளிட்ட மருந்துகளைப் பயன்படுத்தலாம் என்ற மத்திய அரசின் அறிக்கையை மேற்கோள் காட்டினர்.
இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, இ.எஸ்.ஐ உறுப்பினர்களின் நிதியில் அவை செயல்படுத்தப்படுவதால், அங்கு கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க உத்தரவிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இ.எஸ்.ஐ. டிஸ்பென்சரிகளை தடுப்பூசி மையங்களாகப் பயன்படுத்தலாம் என யோசனை தெரிவித்தனர். ஊரடங்கு நல்ல முடிவுகளைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள், ஊரடங்கு குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அடுத்தகட்டமாக கரோனா குழந்தைகளுக்குப் பரவும் எனப் பல எச்சரிக்கைகள் வருவதால், குழந்தைகள் பாதிக்கப்படாத வகையில் போதிய நடவடிக்கைகளை எடுக்கவும், கருப்பு பூஞ்சை நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினர்.
தொற்று எண்ணிக்கை குறைந்தாலும், பரிசோதனைகள் போதுமான அளவில் இல்லை எனவும் சுட்டிக்காட்டினர். தடுப்பூசிகள் முழுமையாக வராததால் சில இடங்களில் முகாம்கள் தொடங்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
நெல்லையில் நீதித்துறை நடுவர் நீஷ் மரணமடைந்துள்ளதை அடுத்து, நிர்வாக முடிவாக உடனடியாக கீழமை நீதிமன்றங்களின் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
தென் மாவட்டங்களில் படுக்கை எண்ணிக்கை குறைவாக இருப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், சிகிச்சைக்குத் தேவைப்படும் பட்சத்தில் நீதிமன்ற வளாகங்களையும், இந்து சமய அறநிலைய இடங்களையும் மாற்றிக் கொள்ளலாம் என அரசுக்கு அறிவுறுத்தினர். உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி வளாகத்தையும் மாற்றிக் கொள்ளலாம் என அனுமதித்துள்ளனர்.
ஆக்சிஜன் சப்ளை தற்போது போதுமான அளவில் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், 140 கோடி மக்கள்தொகை உள்ள நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டுமென அறிவுறுத்தினர். பின்னர் வழக்கு விசாரணையை மே 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.