தமிழகம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா தொற்று: தினமும் மயானத்திற்கு வரும் 20க்கும் மேற்பட்ட உடல்கள் 

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா தொற்று அதிகரிப்பதுடன், மாவட்டத்தில் போதுமான படுக்கை வசதியில்லாத நிலையும் நிலவுகிறது.

மயானத்திற்கு நாள்தோறும் 20 க்கும் மேற்பட்ட உடல்கள் தகனத்திற்கு வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் வரை கரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. பிற மாவட்டங்களை விட மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே கரோனா தொற்று பாதிப்பு இருந்தது.

இந்த மாத தொடக்கம் முதல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

கடந்த மே 10 ம் தேதி 340 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 11 ம் தேதி 291 பேர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மே 12 ம் தேதி 358 பேர், மே 13 ம் தேதி 398 பேர் என பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து மே 14 ம் தேதி 429 எனவும், மே 15 ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 458 எனவும் அதிகரித்தது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா தொற்றால் திண்டுக்கல் மாவட்ட மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். பழநி பகுதியில் ஒரே நாளில் 148 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இறப்பு விகிதம் அதிகரிப்பு:

கரோனா தொற்றால் இறப்பவர்கள் எண்ணிக்கை தினமும் பத்துக்கும் குறைவாக இருந்தபோதும், பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என இறப்பு விகிதம் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அதிகரித்துவருகிறது.

திண்டுக்கல் மின்மயானத்தில் மட்டும் பணியாளர்கள் ஒரு நாளைக்கு 20 மணிநேரத்திற்கு மேலாக பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக தினமும் அதிகபட்சமாக திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து ஐந்து உடல்களே எரியூட்ட வந்தநிலையில்,

கடந்த சில தினங்களாக 20 க்கும் மேற்பட்ட உடல்கள் மின்மயானத்திற்கு எரியூட்ட கொண்டுவரப்படுகின்றன. இங்கு எரியூட்ட தாமதமாவதால் அருகிலுள்ள எரியோடு மயானத்திற்கும் சில உடல்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

மருத்துவமனைகளில் இடம் இல்லை:

திண்டுக்கல், பழநி உள்ளிட்ட நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியநிலையில் தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு இடம் கிடைக்காதநிலை ஏற்பட்டுள்ளது, திண்டுக்கல் புறவழிச்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளின் உறவினர்களையே ஆக்சிஜன் வாங்கிவரச்சொல்லும் அவலநிலை உள்ளது.

மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிக்கு தீவிர சிகிச்சையளிக்க வேண்டியநிலை வரும்போது ஆம்புலன்சை வரவழைத்து அவர்களை அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர்.

இதனால் சிகிச்சை பெறுபவர்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.

மனிதாபிமானமின்றி தீவிர சிகிச்சையின்போது நோயாளிகளை வெளியேற்றும் தனியார் மருத்துவமனைகளைக் கண்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும். மேலும் ஆக்சிஜன் வினியோகத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT