விழுப்புரம் அருகே தாழ்த்தப்பட்ட பெரியவர்கள் காலில் விழுந்த கிராமத்தில் வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை கள ஆய்வு மேற்கொண்டது.
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதியில் கடந்த 12-ம் தேதி மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, இரவு 10 மணிக்கு ஆடல்-பாடல் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இது பற்றி, ஒட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், திருவெண்ணெய்நல்லூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் சென்று, கரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், கோயில் திருவிழா நடத்தக்கூடாது என்றும், ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்குத் தடை விதித்திருப்பதாகவும் கூறி, இசைக்கருவிகளைப் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, இருதரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 14-ம் தேதி கிராம பஞ்சாயத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, தாழ்த்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த பெரியவர்கள் மற்றொரு தரப்பினரின் காலில் விழுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து, இருதரப்பினர் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில், ஒரு தரப்பில் 54 பேர்மீது கொலை மிரட்டல் வழக்கும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த 8 பேர்மீது வன்கொடுமை தடை சட்டத்தின் கீழும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, 2 பேரை கைது செய்தது.
மேலும், வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள மற்ற 6 பேரை கைது செய்ய 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை தலைவர் வழக்கறிஞர் கே. பாலு தலைமையிலான குழுவினர் இன்று (மே 17) ஒட்டனந்தல் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து, பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"காவல்துறை அனுமதி இல்லாமல் கரோனா வழிகாட்டு முறைகளை மீறி ஒரு தரப்பினர், திருவிழா நடத்த இருப்பதாக ரமேஷ் புகார் கொடுத்துள்ளார். இக்கிராமத்தில், கரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்ததால் அச்சத்தில் அவர் அந்தப் புகாரை கொடுத்துள்ளார்.
இசைக்கருவிகளை பறிமுதல் செய்த போலீஸார், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யவில்லை. இது குறித்து, திருவிழா நடத்த ஏற்பாடு செய்தவர்கள் ரூ. 2 லட்சம் செலவானதாக சொல்லி தகராறில் ஈடுபட மீண்டும் ரமேஷ் புகார் கொடுத்துள்ளார்.
திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் எஸ்.ஐ பாலமுருகன், காவல்துறைக்கு தகவலை தெரிவித்ததால்தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். மேலும், மற்றொருதரப்பை புகார் கொடுக்கவும் சொல்லியுள்ளார். அவர் இப்பகுதியில் கையூட்டு பெறுவதில் கை தேர்ந்தவர்.
இரு தரப்பினரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மன்னிப்பு கேட்கவேண்டிய சூழலே ஏற்படவில்லை. அதற்கு அவசியமுமில்லை. மன்னிப்பு தேவையில்லாதது என்று சொல்லிய பின்பும், திட்டமிட்டு அவர்களுக்கு பின்னால் இருந்தவர்கள் காலில் விழு என்று சொல்லும் காட்சியும் வீடியோவில் வருகிறது. வெற்றிலை பாக்கை கையில் கொடுப்பது போலவும் வருகிறது.
இப்படி அவதூறாகவும், இரு சமூகத்தினரிடமும், வன்முறையை தூண்ட வேண்டும், பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த செயலை செய்துள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களும் , நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களும் இச்செயலை செய்துள்ளனர்.
தமிழகத்தில் இதேபோன்று வன்னியர் மற்றும் பிற சமூகத்தினர் மீதும் சாதிய வன்மத்தை தூண்டும் வகையில், சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதால் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர்.
ஆனால், திருவிழா நடத்தியவர்கள் மீதும், திருவிழா நடத்த ஏன் அனுமதிக்கவில்லை என்று மிரட்டியவர்கள் மீதும் இன்னமும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
உண்மையை அறியாமல் வன்கொடுமை தடை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்படுவது குறித்து தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்திடம் புகார் வழங்க உள்ளோம். எஸ்.பி-யிடம் இப்பிரச்சினைக்குக் காரணமான எஸ்.ஐ பாலமுருகனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளோம்.
இங்கு வசிப்பவர்கள் ஒற்றுமையாக உள்ளனர். இங்குள்ள இரு சமூக பெரும்பான்மை மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. இப்பிரச்சினை குறித்து உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை சார்பில் இந்த ஆய்வை மேற்கொண்டோம். இந்த செயலுக்கு காரணமானவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்".
இவ்வாறு அவர் கூறினார்.
கரோனா வழிகாட்டு முறைகளை மீறி திருவிழா நடத்த ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என, எஸ்.பி. ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, இது குறித்து புகார் ஏதும் பெறப்படவில்லை என்றார்.