கரோனா காலம் என்பதால் பொதுமக்களை மனிதநேயத்துடன் அணுகவேண்டும் என எனப் புதிதாக பொறுப்பேற்ற தென்மண்டல ஐஜி அன்பு கூறினார்.
தென்மண்டல ஐஜியாக பணிபுரிந்த சண்முக ராஜேஸ்வரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து தென்மண்டல ஐஜியாக முருகன் நியமிக்கப்பட்டார்.
தேர்தல் நேரத்தில் திடீரென அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து, தென்மண்டல ஏடிஜிபியாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் தென் மண்டல ஐஜி பதவி ஏடிஜிபி பதவிக்கு நிலை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் தென்மண்டல புதிய ஐஜியாக அன்பு நியமிக்கப்பட்டார். தென்மண்டல ஏடிஜிபி பதவி மீண்டும் ஐஜி ரேங்கிற்கு நிலை இறக்கப்பட்டது.
அவர் இன்று (மே 17) காலை 9.30 மணிக்கு மதுரையிலுள்ள தென்மண்டல ஐஜி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மதுரை சரக டிஐஜி சுதாகர், மதுரை எஸ்.பி சுஜித்குமார் ஆகியோர் சந்தித்து வாழ்த்து கூறினர்.
கரோனா ஊடங்கால் டிஐஜிக்கள், எஸ்.பிக்கள், காவல் துறை அதிகாரிகள் நேரில் வர முடியாத நிலையில் போனில் வாழ்த்து தெரிவித்தனர்.
ஐஜி அன்புவின் சொந்த ஊர் திருவள்ளுர் மாவட்டம், தாராச்சி கிராமம். இவர், 2001ல் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பட்டுக்கோட்டை உதவி எஸ்.பி.யாக பணியைத் தொடங்கினார்.
தொடர்ந்து கோவை நகர் துணை ஆணையராகவும், 2006-2008 வரை மதுரை மாவட்ட எஸ்.பி.யாகவும், தொடர்ந்து
வேலூர், தஞ்சாவூர் எஸ்.பி.யாக பணி புரிந்தார். இதன்பின், சென்னை அண்ணாநகர், பூக்கடை பஜார், திருவல்லிக்கேணி துணை ஆணையராக பணியாற்றிய அவர், பதவி உயர்வு பெற்று நெல்லை, சென்னை தெற்கு, கிழக்கு சரக டிஐஜியாக பணிபுரிந்துள்ளார்.
ஐஜியாக உயர்வு பெற்ற அவர் சென்னை தலைமையிடத்து நிர்வாக ஐஜியாகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராகவும், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாகவும் பணிபுரிந்துள்ளார்.
சமீபத்தில் நெல்லை நகர காவல் ஆணையராக மாற்றப்பட்ட அவர், தற்போது தென்மண்டல காவல்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுள்ளார்.
பொறுப்பேற்ற பின்னர் அவர் கூறுகையில், ‘‘இது கரோனா ஊடரங்கு காலம். மக்கள் ஒத்துழைப்புடன் கரோனாவை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். பொதுமக்களை மனித நேயத்துடன் அணுகவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நோய்த் தடுப்புக்கான கட்டுப்பாடும் முக்கியம். வழக்கம்போன்று சட்டம், ஒழுங்கு, குற்றம் தடுக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். காவல் நிலையங்களுக்கு வரும் மக்களை கனிவோடு அணுக போலீஸாருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மதுரை, நெல்லையில் பணிபுரிந்துள்ளேன். தென்மாவட்டம் எனக்கு புதிதல்ல. கரோனா கட்டுப்பாடுக்குப் பிறகு புதிய திட்டங்களை உருவாக்கி, குற்றத்தடுப்பு போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும்’’ என்றார்.