மதுரை அரசு ராஜாஜி கரோனா சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி மூர்த்தி மற்றும் மக்களவை எம்.பி. சு வெங்கடேசன் ஆகியோர் நள்ளிரவில் ஆக்சிஜன் லாரி வரும்வரை காத்திருந்து ஆய்வு செய்தனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 24 மணி நேரமும் அனைத்துப் பிரிவினருக்கும் தென் மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது.
இதனருகில் கரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு அங்கு சுமார் 1500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு நேற்று மாலை 3 மணிக்கு வரவேண்டிய ஆக்சிஜன் லாரி இரவு 10 மணி வரை வரவில்லை காலதாமதம் ஏற்பட்டது. மேலும், தாமதம் ஆனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் எனத் தகவல் வெளியானது.
இதனை அறிந்த வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பெ. மூர்த்தி மதுரை தனியார் ஆக்சிஜன் தயாரிப்பு மையத்திற்கு உடனடியாக சென்று அங்கிருந்து ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்தார்.
ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல் நேரடியாக இரவு இரண்டு மணிக்கு மருத்துவமனையிலேயே இருந்து ஆக்சிஜன் முழுவதும் நிரப்பிய பின்பு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்
அவசரம் கருதி தென் மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருவதால் உடனடியாக இங்கே ஆக்சிஜன் தேவை என ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தி நள்ளிரவு ஒரு மணி அளவில் சிலிண்டர் லாரி வரும் வரை மருத்துவமனை வாயிலில் காத்திருந்தனர்.
அமைச்சர் மூர்த்தியுடன், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனும் வந்திருந்தார்.
மதுரை கரோனா மையத்தில் 8700 கி.லி ஆக்சிஜன் கொள்ளளவு கொண்ட கொள்கலன் உள்ளது.
ஆக்சிஜன் லாரி வருகை காலதாமதம் குறித்த காரணங்களை மருத்துவமனை முதல்வர் சங்குமணி, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமாரி கூடுதல் ஆட்சியர் உள்ளிட்டோரிடம் நேரில் வரவழைத்து விவரங்களைக் கேட்டறிந்தார்.
1500 பேரது சிகிச்சைக்கு ஆக்சிஜன் அத்தியாவசியத் தேவை என்பதால் அரசு மருத்துவமனை வாயிலில் அமைச்சர் மூர்த்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகளும் ஆக்சிஜன் லாரி வரும்வரை காத்திருந்து களத்தில் இறங்கி மக்களுக்கு பணியாற்றியது பொது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.