தமிழகம்

பொது இடங்களில் ஆவி பிடித்தல் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது; நோய்ப் பரவல் அதிகரிக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கரோனா சிகிச்சையின் ஒரு அங்கமாக நீராவி பிடித்தல் நிகழ்ச்சியைப் பொது இடங்களில் நடத்தக் கூடாது. அதனால் நோய்த்தொற்று மேலும் அதிகரிக்கும். ஆகவே, பொது இடங்களில் ஆவி பிடித்தல் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நோய்த்தொற்றைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நுரையீரலைத் தாக்கும் கரோனா வைரஸிலிருந்து தப்பிக்க தொண்டை மற்றும் சுவாசப்பாதைகளை வைரஸ் தொற்றில்லாமல் பாதுகாக்க பாலில் மஞ்சள் தூள் கலந்து பருகுவது, ஆவி பிடிப்பது, சூடான தண்ணீரை அவ்வப்போது அருந்துவது போன்ற முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஆவி பிடித்தல் நிகழ்ச்சியைப் பொது இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக அமல்படுத்துவது என்பது பெருகி வருகிறது. நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக ஆவி பிடிக்கும் வசதியை போலீஸார் அறிமுகப்படுத்தினார்கள். இதுபோன்று பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆவி பிடிப்பதால் கரோனா தொற்றுள்ளவரும் அதில் பங்கேற்க வாய்ப்புண்டு. அதனால் மற்றவர்களுக்கும் தொற்று அதிகரிக்குமே தவிர குறையாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர்.

இந்நிலையில் இன்று லயோலா கல்லூரியில் கரோனா சிகிச்சை மையத்தை நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் கரோனா தொற்றைத் தவிர்க்க ஆவி பிடித்தல் நிகழ்ச்சியாப் பொது இடங்களில் ஆவி பிடிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என வலியுறுத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. பொது இடங்களில் ஆவி பிடிக்கிறோம் என்கிற அளவில் புகையை உள்வாங்குகிறார்கள். உடனடியாக அப்படிச் செய்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு வரும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அந்தத் தவறைச் செய்யக்கூடாது என்கிறார்கள். தொற்று வந்த ஒருவர் மூலம் 400 பேருக்குத் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு என்கிறார்கள்.

இவ்வாறு பொது இடங்களில் ஆவி பிடிக்கும்போது தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆவி பிடித்தால் அவர் நுகர்ந்து வெளிவரும் காற்றின் மூலம் மற்றவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அவருக்கும் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். அவர் ஆவி பிடித்த பின்னர் அதே இடத்தில் ஆவி பிடிப்பவருக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. கரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது நுரையீரல்தான். எனவே நுரையீரலைக் குறிவைத்துத் தாக்கும் வைரஸைப் பரப்ப நாமே காரணமாக இருந்துவிடக் கூடாது.

எனவே பொது இடங்களில் இதுபோன்ற காரியங்களைச் செய்கின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் சிறந்த மருத்துவர் ஆலோசனை பெற்று எதையும் செய்ய வேண்டும்”.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT