தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் கட்டுப் பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸார் தடுப்புகள் அமைத்தும், ரோந்து வாகனங்களில் சென்றும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். விதிமுறைகளை மீறி சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
சில இடங்களில் தனிநபர்கள் தன்னிச்சையாக சுற்றுவது, குடியிருப்பு பகுதிகளில் தேவையின்றி குழுவாக அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பது, இருசக்கர வாகனங்களில் சுற்றி வருவது என கரோனா தடுப்பு விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க, கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ட்ரோன் கேமராக்கள்மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோ பதிவுகளை வைத்து,அந்தந்த பகுதி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஊரடங்கு நடவடிக்கையின்போது, வானில்தாழ்வாக பறந்துவரும் ட்ரோனைபார்த்ததும் பலர் ஓடுவது, பின்தொடர்ந்து வரும் ட்ரோன் கேமராவில் சிக்காமல் மறைந்து கொள்வது போன்ற காட்சிகள் வெளியாகின. இந்த முறை பிரதான சாலைகளில் மட்டுமல்லாது, தெருக்களை கண்காணிக்கவும் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்த காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
சென்னை, கோவை, திருப்பூரில் கடந்த 2 நாட்களாக ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இன்று முதல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.