தமிழகம்

காற்றுடன் கன மழை பெய்து வருவதால் 18 செ.மீ. பதிவுகன மழை: அதிகபட்சமாக பந்தலூரில்

செய்திப்பிரிவு

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்ததால் கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக பந்தலூரில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கன மழை பெய்து வருவதால் உதகை, குன்னூர், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையுடன், தீயணைப்பு, நெடுஞ்சாலை, காவல், வருவாய் உட்பட அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்றுமுன்தினம் இரவு அவ்வப்போது காற்று வீசினாலும் பரவலாக மழை பெய்தது. காற்றின் காரணமாக ஆங்காங்கே சாய்ந்த மரங்களை நெடுஞ்சாலை, தீயணைப்புத் துறையினர் வெட்டி அகற்றினர்.

மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் நிஷா பிரியதர்ஷினி கூறும்போது, "இன்று காலை (நேற்று) நிலவரப்படி, மாவட்டத்தில் பாதிப்பு ஏதும் இல்லை. தேவையான உபகரணங்களுடன் பேரிடர் அபாய பகுதிகளில் தேசிய மீட்புப் படை, தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்" என்றார்.

கடும் குளிர்

இந்நிலையில், உதகையில் நேற்று காலைமுதல் மழையின் தாக்கம் குறைந்திருந்தது. கடும் குளிரான காலநிலை நிலவியதால், மக்கள் அவதிக்குள்ளாகினர். மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியையொட்டிய அப்பர் பவானி, அவலாஞ்சியில் மழைப்பொழிவு அதிகரித்ததால், கோர குந்தா, தாய்சோலை, அம்மக்கல், அப்பு நாய் நீரோடைகளிலும் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் குந்தா, கெத்தை, பில்லூர் அணைகளில் 3 அடிக்கு தண்ணீர் அளவு உயர்ந்துள்ளது.

மழை அளவு (மி.மீ.)

நேற்று காலை நிலவரப்படி, நீலகிரி மாவட்டத்தில் சராசரியாக 44.79 மி.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக பந்தலூரில் 180 மி.மீ. பதிவானது. தேவாலா - 145, அப்பர்பவானி - 106, நடுவட்டம் - 91, கூடலூர் - 68, அவலாஞ்சி - 54 மி.மீ.

SCROLL FOR NEXT