தமிழகம்

விமான நிலையத்தில் தண்ணீர் வடியத் தொடங்கியது

செய்திப்பிரிவு

சென்னை விமான நிலையத்தில் தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது.

சென்னையில் பெய்த தொடர் கனமழையால் விமான நிலையம் மற்றும் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் விமான போக்குவரத்து முடங்கியது. இதையடுத்து டிசம்பர் 6-ம் தேதி வரை (இன்று) விமான நிலையம் மூடப்படுவதாக கடந்த 2-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அரக்கோணத்தில் உள்ள ராஜாளி விமானத் தளம் தற்காலிக விமான நிலையமாக செயல்படத் தொடங்கியது.

மழையின் அளவு மற்றும் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீர் குறைக்கப்பட்டதால் விமான நிலையத்தில் தண்ணீர் வடியத் தொடங்கியது. இதனால் திட்டமிட்டபடி சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தொடங்கும் என்று பயணிகள் எதிர்ப்பார்த்திருந்தனர். இந்நிலையில் தேங்கியிருந்த தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது என்று மத்திய விமானத்துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

குட்டி விமானம்

சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஓடுபாதையில் அளவுக்கு அதிகமான தண்ணீர் தேங்கியதால், நிறுத்தப்பட்டுள்ள விமானங்களுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த குட்டி விமானம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அருகில் இருந்த புதரில் சிக்கியுள்ளது.

SCROLL FOR NEXT