புதுச்சேரியில் கரோனா தடுப்பு பணிகளை ஆளுநர் ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வால் எந்த ஒரு பலனும் இல்லை என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
புதுச்சேரியில் புதிய ஆட்சி வந்த பிறகு நிர்வாகம் சீர்க்கெட்டுள்ளது. பல துறைகளுக்குள் ஒருங்கிணைப்பில்லை. புதுவையில் நாள்தோறும் கரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் படுக்கை இல்லாமல் தரையிலும், நாற்காலிகளிலும நோயாளிகளை படுக்கை வைத்து ஆக்சிஜன் கொடுக்கும் அவல நிலை உள்ளது. இதேநிலை தான் தனியார் மருத்துவமனையிலும் உள்ளது. தேவையான கட்டமைப்பை உருவாக்காததன் காரணமாக பல உயிர்களை இழந்துள்ளோம். இப்போது யாரும் களப்பணிக்கு செல்வதில்லை. பாதிக்கப்பட்ட மக்களைப்பார்ப்பதில்லை. மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்ய வில்லை.
புதிதாக பதவிக்கு வந்தவர்கள் எல்லாம் எப்படி அதிகாரத்தை பெறுவது என்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. மத்திய அரசிடமிருந்து தேவையான அனைத்து வசதியையும் பெற்று தருவோம் என்று சொல்வதோடு சரி. ஒன்றும் நடைபெறவில்லை.
ஆளுநர் ஆய்வு செய்வதன் விளைவும் பூஜ்ஜியம்தான். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ஐசியூ படுக்கை கிடைக்காமல் பலர் உயிரிழந்துள்ளனர். இதற்கு யார் பொறுப்பேற்பது. ஆளுநரா? அல்லது புதிதாக பொறுப்பேற்ற அரசு பொறுப்பேற்குமா? முதல்வர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரால் இதை செய்ய முடியாது. ஆனால் நிர்வாகத்தினர் முனைந்து செயல்பட வேண்டும்.
அரசு மருத்துவக் கல்லூரியில் இன்னும் 300 படுக்கைகளும், ஜிப்மரில் இன்னும் 700 படுக்கைகள் உருவாக்க வேண்டும். அனைத்து நிதியையும் குறைத்துவிட்டு மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்குவதற்கான உபகரணங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊரடங்கு உத்தரவை மிக தீவிரமாக செயல்படுத்த வேண்டும. அதன் மூலம் தொற்றை குறைக்கவேண்டும். அதற்கான நடவடிக்கையை மாநில நிர்வாகம், மாவட்டநிர்வாகம் செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் சரியான முறையில் செயல்படவில்லை. மக்களின் குறைகளை கேட்க கூட தயாராக இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.