தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வஉசி துறைமுகத்துக்கு கடந்த 14-ம் தேதி பனாமா கொடியுடன் எம்.வி.பஸ்டியன்ஸ் என்ற சரக்கு கப்பல் வந்தது. இக்கப்பல் 245 மீட்டர் நீளமும், 43 மீட்டர் அகலமும், 13.04 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட பெரிய கப்பல். இக்கப்பல் இந்தோனேஷியா நாட்டிலுள்ள முயரா பெராவ் என்ற துறைமுகத்தில் இருந்து 92,935 டன் நிலக்கரியை தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்துக்காக ஏற்றி வந்துள்ளது.
சரக்குதளம் 9-ல் நிறுத்தப்பட்ட இக்கப்பலில் இருந்து நாள் ஒன்றுக்கு 50,000 டன் சரக்குகளை கையாளும் திறன்கொண்ட மூன்று நகரும் பளு தூக்கிகள் மூலம் நிலக்கரியை இறக்கும் பணி நடைபெற்றது. இக்கப்பலின் மொத்த சரக்குகளும் நேற்றுடன் முழுமையாக இறக்கப்பட்டன.
இதற்கு முன்பு 11.04.2021 அன்று சரக்கு தளம் ஒன்பதில் 92,028 மெட்ரிக் டன் சரக்குகளுடன் கூடிய பெரிய கப்பலை வஉசி துறைமுகம் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியாண்டில் ஏப்ரல் மாதம் வரை வஉசி துறைமுகம் 11.81 லட்சம் டன் நிலக்கரியை கையாண்டு, இதற்கு முந்தைய நிதியாண்டு இதே காலக்கட்டத்தில் கையாண்ட அளவான 11.05 லட்சம் டன்களைவிட அதிகமாக
5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.