தமிழகத்தில் கரோனா 2வது அலை அதி தீவிரமாகப் பரவி வருகிறது. முதல் அலையின்போது திடீரென அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் விளிம்புநிலை மக்கள் பாதிக்கப்பட்டதாக அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் குற்றம்சாட்டினார். பொதுமுடக்க காலத்தில் மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கிடையே நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை மே.7-ம் தேதி பதவியேற்றுக்கொண்டது. அன்றே கரோனாவால் பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 5 முக்கியக் கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து மே 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையே அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், முதல்வரால் 10-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று டோக்கன்கள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து நேற்று (15-ம் தேதி) முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் ரூ. 2,000 வழங்கப்பட்டு வருகின்றன. அரிசி அட்டை வைத்துள்ள சுமார் 2.07 கோடி பேர் இந்த நிவாரணம் பெறத் தகுதியானவர்கள் ஆவர். இந்நிலையில் பொருளாதார வசதியும் விருப்பமும் உள்ளவர்கள், தங்களுக்கான கரோனா நிவாரண நிதியை அரசுக்கே திரும்பக் கொடுத்துவிட முடியுமா என்று கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்துப் பதிலளித்த கோவை மாவட்ட உணவு வழங்கல் துறை அலுவலர் முருகேசன், ''விருப்பமுள்ள அட்டைதாரர்கள் அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வேண்டாம் என்று எழுதிக் கொடுப்பதைப் போல நிவாரணத் தொகையும் வேண்டாம் என்று அரசுக்குத் தெரிவிக்க முடியும்.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை (TNEPDS) செயலியில் விட்டுக் கொடுத்தல் (Give it up) என்னும் தெரிவைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், கரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் உங்களுக்கு வழங்கப்படாது. அதன்மூலம் நிவாரணத் தொகையை அரசுக்கே நீங்கள் திருப்பிக் கொடுக்கலாம்.
ஒருவேளை நீங்கள் டோக்கனைப் பெற்றிருந்தால் அதை ரேஷன் கடைக்கு எடுத்துச் செல்லாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். இப்படிச் செய்தாலும் உங்களின் நிவாரணத் தொகையை அரசிடமே திரும்பக் கொடுத்துவிடுவோம்.
அடுத்தடுத்த முறைகளில் அரசின் நிவாரணத் தொகை தங்களுக்குத் தேவையில்லை என்றால், நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலியில் ஒவ்வொரு முறையும் அதை முன்பதிவு செய்ய வேண்டும்'' என்று முருகேசன் தெரிவித்தார்.