தமிழகம்

ஆளுநர் தமிழிசையுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி; புதுவைக்கு தேவையான உதவிகளைச் செய்து தருவதாக உறுதி 

செ.ஞானபிரகாஷ்

தன்னுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி இன்று உரையாடியதாகவும் புதுவைக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக பிரதமர் உறுதியளித்தாகவும் ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று வாட்ஸ்அப்பில் கூறியதாவது:

’’பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவின் தற்போதைய சூழ்நிலை குறித்து முழு விவரங்களையும் மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்தார்கள். மேலும் கரோனா நோய்த் தொற்று விகிதம், ஆக்சிஜன் படுக்கை வசதிகள், கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட விவரங்கள் போன்ற விவரங்களைத் துல்லியமாகக் கேட்டறிந்தார்கள்.

புதுச்சேரி மாநிலத்திற்கு ஏற்கனவே அளித்த உதவிகளுக்கும் மேலாக, மேலும் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என உறுதி அளித்தார். மத்திய அரசால் வழங்கப்பட்ட வெட்டிலேட்டர்கள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் உடல்நிலை பற்றி மிகுந்த அக்கறையுடன் நலம் விசாரித்தார், அவர் விரைவில் பூரண நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தன் விருப்பத்தையும் தெரிவித்துக்கொண்டார்’’.

இவ்வாறு ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT