சிங்கம்புணரி சேவுகபெருமாள் அய்யனார் கோயில் அருகே கழைக்கூத்தாடிகளுக்கு உணவு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மனோகரன். 
தமிழகம்

உணவின்றி தவித்த கழைக்கூத்தாடிகளுக்கு உதவிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உணவின்றி தவித்த கழைக்கூத்தாடிகளுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் மனோகரன் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

சிங்கம்புணரி சேவுக பெருமாள் அய்யனார் கோயில் அருகே 50-க்கும் மேற்பட்ட கழைக்கூத்தாடிகள் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்கள், கிராமம், கிராமமாக சென்று கலைநிகழ்ச்சி, சர்க்கஸ் நடத்தி பிழைப்பு நடத்தி வந்தனர்.

தற்போது கரோனா ஊரடங்கால் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மேலும், உணவின்றி தவித்து வந்தனர். இதை அறிந்த சிங்கம்புணரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மனோகரன் இன்று (மே 16) உடனடியாக கழைக்கூத்தாடிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.

மேலும், ஒரு குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளையும் சொந்த செலவில் வாங்கி கொடுத்தார். ஆய்வாளருக்கு சக போலீஸார் ஒத்துழைப்பு அளித்தனர். போக்குவரத்து காவல் ஆய்வரின் மனிதநேயத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

இதேபோல், சிங்கம்புணரி அருகே சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்துக்குமார் பிரான்மலையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரும், அவரது மனைவியும் இணைந்து வீட்டில் உணவு சமைத்து ஆதரவற்றோர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

SCROLL FOR NEXT