தமிழகத்தில் உள்ள 18 கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் ஆக்சிஜன் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மோகனூரில் உள்ள சேலம் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகக் குழு உறுப்பினரும், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பின் செயலாளருமான ஓ.பி.குப்புதுரை கூறியதாவது:
ஆக்சிஜன் தயாரிப்பில் ஈடுபடுவோருக்கு 30 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் 2 பொதுத் துறை சர்க்கரை ஆலை என மொத்தம் 18 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இந்த சர்க்கரை ஆலைகளில் ஆக்சிஜன் தயாரிப்புக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. எனவே, இந்த ஆலைகளில் ஆக்சிஜன் தயாரிக்க அரசு உத்தரவிட்டால் தற்போது நிலவும் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சர்க்கரை ஆலைகளில் ஆக்சிஜன் தயாரிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல் தமிழகத்தில் உள்ள 18 கூட்டுறவு மற்றும் பொதுத் துறை ஆலைகளில் ஆக்சிஜன் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தயாரிப்புக்குத் தேவையான நிதி உள்ளிட்டவற்றையும் அரசு வழங்க வேண்டும். இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க உதவியாக இருப்பதுடன் ஆலைக்கும் வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.