தமிழகம்

செங்கல்பட்டில் தூர்ந்துபோன மழைநீர் கால்வாய்: சீரமைக்க மக்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு நகரத்தில் கழிவு நீர் வெளியேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த மழைநீர் வடிகால்வாய் மண் மேடாகி தூர்ந்து போனதால் அதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு நகரப்பகுதியின் தெருக்களில் உள்ள வடிகால்வாய்களில், வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மண் கால்வாயை அடைத்துள்ளதால் தண்ணீர் செல்லமுடியாத நிலை உள்ளது. அதனால், கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு நகர தெருக்களில் மழை நீர் வெளியேறுவதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் வடிகால்வாய்களை அமைத்தது. சாலைகளில் தேங்கும் மழைநீர் கொளவாய் ஏரியை அடையும் வகையில் இந்த கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதாள சாக்கடை வசதியில்லாததால் குடியிருப்புகளிலிருந்து இந்த கால்வாய்கள் வழியாக கழிவுநீர் வெளியேற்றப்படும் அவலமும் ஆண்டாண்டு காலமாக அரங்கேறி வருகிறது. மேலும் முறையான பாரமரிப்பு இல்லாததால் கால்வாய்களின் பல பகுதிகள் மண்மேடாகவும் சிதிலமடைந்தும் காட்சியளிக்கின்றன.

இந்நிலையில் அண்மையில் பெய்த கனமழையால் மழைநீர் வடிகால்வாய்க்குள் அதிகளவில் தண்ணீர் புகுந்தது. கரைபுரண்டு வந்ததால் இந்த கால்வாய்கள் அனைத்தும் மண் சேர்ந்து தூர்ந்து போய் உள்ளன. இதனால், தற்போது குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம், நோய் தொற்று உள்ளிட்ட அவதிக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். எனவே இந்த கால்வாய்களை உடனடியாக தூர்வாரி சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீர் சூழ்ந்ததால் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் நாசமாகிவிட்டதாகவும் மழை நின்றும் சீரமைப்பு நடவடிக்கை இல்லை எனவும் வேதாச்சலம் நகரைச் சேர்ந்த ஜெயலட்சுமி கூறினார்.

இதுகுறித்து, செங்கல்பட்டு நகராட்சி மண்டல இயக்குநர் பிரேமாவிடம் கேட்டபோது, ‘குடியிருப்பு பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களில் மண்டியுள்ள மண்ணை அகற்றும் பணி, ஆணையர் மூலம் விரைவில் மேற்கொள்ளப்படும்’ என்றார். ஆணையர் முகம்மது மொய்தீன் கூறும்போது, ‘நகராட்சி அதிகாரிகள் மூலம் தெருக்களில் ஆய்வு செய்து கால்வாய்கள் தூர்வாரப்படும்’ என்றார்.

மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்ட நோக்கமே நிலத்தடி நீர்வளத்தை அதிகரிக்கவும் நீர்நிலைகளின் நீராதாரத்தை பெருக்கவும்தான். ஆனால் செங்கல்பட்டு நகரத்தில் பாதாள சாக்கடையோ அல்லது திறந்தநிலை கழிவுநீர் வடிகால்வாயோ இல்லாததால் பல பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் சாக்கடையாக மாறியுள்ளது. அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதன் விளைவே இந்த அவலத்துக்கு காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

SCROLL FOR NEXT