`இந்து தமிழ்' செய்தி எதிரொலியாக, சென்னையில் காலியாக உள்ள மயானங்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் ஆன்லைனில் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
‘சென்னை மாநகராட்சி மயானங்களுக்கு வரும் சடலங்கள் அதிகரிப்பு: காலியாக இருக்கும் மயானங்களை அறிய முடியாமல் மக்கள் அவதி: ஆன்லைன் மயான முன்பதிவு, 24 மணி நேர சேவை வழங்க கோரிக்கை’ என்ற தலைப்பில் `இந்து தமிழ்' நாளிதழில் கடந்த 10-ம் தேதி செய்தி வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களை கண்காணிக்க, மருத்துவக் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் பயிற்சி மருத்துவர்கள் 300 பேர், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ளகட்டுப்பாட்டு அறைகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் பயிற்சி வழங்கப்பட்டு, நேற்று பணியில் சேர்ந்தனர்.
அவர்களது பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போது பணியில் அமர்த்தப்பட்டுள்ள பயிற்சி மருத்துவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள நோயாளிகளின் உடல் வெப்பநிலை, ரத்த ஆக்சிஜன் அளவு, உணவு மற்றும் மாத்திரைகளை முறையாக உட்கொள்கிறார்களா உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிவர்.
சென்னையில் உள்ள மயானங்களில் 140-க்கும் மேற்பட்ட, சடலங்களை தகனம் செய்யும் மேடைகள் உள்ளன. மாலை நேரத்தில் அதிகசடலங்கள் வருகின்றன. வழக்கமாக மாலை 6 மணி வரை மட்டுமே மயானங்கள் செயல்படும். சடலங்கள் அதிகம் வருவதால், நள்ளிரவுவரை இயங்க அனைத்து மயானங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அங்கு தினமும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட பின்னரே, இயந்திரங்களை இயக்க வேண்டியுள்ளது. 24 மணி நேரமும் செயல்பட்டால் அந்த இயந்திரங்கள் பழுதாகிவிடும். அவ்வாறு இயந்திரங்கள் பழுதானால், வேறு மயானங்களுக்கு சடலங்களை அனுப்ப,அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 3 மயானங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை விரைந்து முடிந்து, அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மயானங்களின் சிசிடிவி காட்சிகளை, மாநகராட்சி உயரதிகாரிகள் செல்போனில் பார்க்கும் வசதியை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அவை செயல்பட்டுக்கு வரும். அதன் மூலம் மயானங்கள் அனைத்தும் அதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பில் வந்துவிடும்.
மேலும், எந்தெந்த மயானங்கள் காலியாக உள்ளன என்பதை ஆன்லைனில் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்துமாறு மாநகராட்சி தகவல் தொழில்நுட்ப அணிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த வசதி செயல்பாட்டுக்கு வரும்.
ரூ.1.44 கோடி அபராதம் வசூல்
ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தும் வகையில், 15 மண்டலஊரடங்கு அமலாக்க குழுக்கள் செயல்பட்டு வந்தன. அவைதற்போது 30-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, விதிகளை மீறி செயல்பட்டு வந்த 239 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ரூ.1.44கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் விதிகளை மீறிய 50 கடைகளுக்கு, ஊரடங்கு அமலாக்க குழுக்கள் மூலம் சீல் வைக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி, மாநகராட்சி துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் உடனிருந்தனர்.