சென்னை மாநகராட்சிக்கு 30ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நேற்று வழங்கியது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை தேவைப்படுவதால் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநகராட்சி சார்பில் ஆக்சிஜன் உருளைகள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நன்கொடையாகவும் பெறப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், மாநகராட்சிக்கு முதற்கட்டமாக 30 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, அந்நிறுவனத்தின் இயக்குநர் கண்ணன் நேற்று முன்தினம் ரிப்பன் மாளிகையில் வழங்கினார்.
அதை கரோனா சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
சாம்சங் நிறுவனம் சார்பில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு, பேரிடர் நிவாரண நிதியாக ரூ.7.50 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், சென்னை மாநகராட்சிக்கு 975 ஆக்சிஜன் உருளைகள் மற்றும் 3.50 லட்சம் சிறிய ரக சிரிஞ்சுகள் ஆகியவற்றை அடுத்தகட்டமாக வழங்குவதாக ஆணையரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் ஜெ.மேகநாத ரெட்டி, ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்ட முதன்மை செயல் அதிகாரி ராஜ் செருபல், சாம்சங் நிறுவன துணை பொது மேலாளர் எஸ்.பி.திவாகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.