புயல் சின்னம் எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.
அரபிக் கடலில் உருவா கியுள்ள புயல் காரணமாக, தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரையான 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 45 மி.மீ. மழை பதிவானது.
கருப்பாநதி அணையில் 20 மி.மீ., தென்காசியில் 15.4 மி.மீ., குண்டாறு அணையில் 15 மி.மீ., செங்கோட்டையில் 9 மி.மீ., சிவகிரியில் 8 மி.மீ., கடனாநதி அணை, ராமநதி அணையில் தலா 5 மி.மீ., ஆய்க்குடியில் 4.80 மி.மீ. மழை பதிவானது.
சாரல் காலம் தொடங்குவதற்கு முன்பே, தற்போதைய மழையால் கடந்த 2 நாட்களாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கரோனா பரவல் காரணமாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின்றி குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது.
அடவிநயினார் அணை கடந்த 2 நாட்களுக்கு முன் வரை நீரின்றி வறண்டு 10.75 அடிக்கு சேறும், சகதியுமாக காணப்பட்டது.
பலத்த மழையால் நேற்று அடவி நயினார் அணை நீர்மட்டம் 25 அடியாக உயர்ந்தது. கடனாநதி அணை நீர்மட்டம் 65.90 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 52.20 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 48.23 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 28.75 அடியாகவும் இருந்தது.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 44, சேர்வலாறு- 23, மணிமுத்தாறு- 6.4, நம்பியாறு- 10, கொடுமுடியாறு- 55, அம்பாசமுத்திரம்- 5, சேரன்மகாதேவி- 15.2, ராதாபுரம்- 10.6, நாங்குநேரி- 20, களக்காடு- 26.4, மூலக்கரைப்பட்டி- 16, பாளையங்கோட்டை- 10, திருநெல்வேலி- 8.
மழை காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2.40 அடி உயர்ந்து 102.40 அடியாக இருந்தது. அணைக்கு 2,187 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையி லிருந்து 254 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 112.33 அடியிலிருந்து, நேற்று ஒரேநாளில் 4 அடி உயர்ந்து 116.40 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு 541 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்மட்டம் 85.50 அடியாக இருந்தது.
புயல் சின்னம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டப்புளி, இடிந்தகரை, உவரி உட்பட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. கடற்கரையில் மேடான இடங்களில் படகுகளை பாதுகாப்பாக கொண்டு வைத்திருந்தனர்.