தமிழகம்

மதுரையிலிருந்து 14 மாவட்டங்களுக்கு தடையின்றி உணவுப்பொருட்கள் செல்வதில் சிக்கல்? சரக்கு வாகனங்களை அனுமதிக்க வியாபாரிகள் எதிர்பார்ப்பு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை கீழ மாசி வீதி பகுதியிலிருந்து 14 மாவட்டங்களுக்கு உணவுப்பொருட்கள் தடையின்றி செல்லக் கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கில் அனுமதித்தது போல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சரக்கு வாகங்களை அனுமதிக்க வேண்டும் என்று உணவுப்பொருள் வியாபாரிகள் மதுரை மாவட்ட போலீஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்திற்கு தேவையான அரிசி 50 சதவீதம் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வருகிறது. அதுபோல், பருப்பு வகைகள் வடமாநிலங்களான மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வருகிறது.

மேலும், தூத்துக்குடி, சென்னை துறைமுகம் வழியாகவும் வெளிநாடுகளில் இருந்து உணவுப்பொருட்கள் இறக்குதியாகின்றன. சீரகம், கடுகு, சோம்பு, வெந்தயம், மல்லி போன்ற பொருட்கள் குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து வருகிறது.

முந்திரிப் பருப்பு கேரளாவில் இருந்தும், கிஸ்மிஸ் பழம் மகாராஷ்டிராவிலிருந்தும் வருகிறது. பேரிச்சம் பழம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு மும்பையிலிருந்து சாலை மார்க்கமாக மதுரை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு வருகின்றன. இப்படி வந்து இறக்கும் பல்வகை உணவுப்பொருட்கள் மதுரை கீழமாசி வீதி குடோன்களுக்கு வருகின்றன.

மதுரையின் கீழமாசி வீதி பகுதிகளில் இருந்து இந்த உணவுப்பொருட்கள் மட்டுமில்லாது பலசரக்குப் பொருட்கள் மதுரை மட்டுமில்லாது, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கேரளாவில் உள்ள இடுக்கி, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகின்றன. அதனாலேயே, கீழமாசி வீதி பகல் மட்டுமில்லாது இரவிலும் பகல் போல் செயல்படுகின்றது.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால் காலை 6 மணி முதல் 10 மணி வரைதான் கடைகள் திறக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதனால், உணவுப்பொருட்களை மற்ற மாவட்டங்களுக்கு மதுரையிலிருந்து தடையின்றி அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க மதுரை தலைவர் பி.ஜெயப்பிரகாசம் கூறுகையில், ‘‘சென்ற ஆண்டு கரோனா ஊரடங்கில் தொடர் முயற்சியால் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை உணவுப் பொருட்கள் மொத்த வணிகம் கீழ மாசி வீதி பகுதிக்கு அனுமதிக்கப்பட்டது.

அதனால், விலைவாசி ஏற்றமின்றி வடமாநிலங்களில் இருந்து தாரளமாக சரக்கு வரவும், இங்கிருந்து 14 மாவட்டங்களுக்கு சரக்குகள் செல்லவும் வசதியாக இருந்தது.

தற்போது ஊரடங்கு இருக்கும் காரணத்தால் சரக்குகள் சப்ளை தடை ஏற்படாமல் இருக்க, கடந்த ஆண்டு போல் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகளை போலீஸார் அனுமதிக்க வேண்டுகிறோம்.

இரவு 8 மணி முதல் 11 மணி வரை மதுரைக்கு சரக்கு மொத்த வணிகத்தை ஏற்றி வரும் லாரிகள், 407 வாகனங்கள், குட்டியானைகளில் வரும் சரக்குகளை இறக்கி வைக்க அனுமதிக்க வேண்டும்.

இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை சரக்குகளை ஏற்றி அனுப்ப வாகனங்களை வேண்டும்.

காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் குட்டியானை, டிரைசைக்கிள் அனுமதிக்க வேண்டும்.

அரசு அறிவித்துள்ள நடைமுறைப்படி சரக்கு வாகனங்கள் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு எந்த வித தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இன்று மதுரையின் கிழக்குப்பகுதிகளான ராமநாதபுரம் சாலை, சிவகங்கை சாலை, சிந்தாமணிசாலை ஆகிய பகுதிகளில் சரக்கு வாகனங்களை மதுரை நகருக்குள் அனுமதி அளிக்க போலீஸார் மறுக்கிறார்கள்.

இதனால், உணவுப்பொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிற்சாலைகள், கடைகள் திறக்கும் நேரங்களில் உரிமையாளர்கள், பங்குதாரர்கள், தொழிலாளர்கள், கூலித்தொழிலாளர்கள் வந்து செல்ல நிறுவனங்களின் லெட்டர் பேடில் கொடக்கும் உறுதிமொழியை வைத்து அவர்களை அனுமதிக்க வேண்டும்.

இதுதொடர்பாக போலீஸாரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT