கரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு உணவளிக்கும் பணியில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்களுக்கு ஒரு கிலோ அரிசியை ரூ.22க்கு இந்திய உணவுக் கழகம் வழங்கி வருகிறது.
வடகோவையில் அமைந்துள்ள இந்திய உணவுக் கழக (எஃப்சிஐ) கோவை கோட்டமானது பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா (பிஎம்ஜிகேஏஒய்-3) திட்டத்தின் கீழ் இலவச அரிசி, கோதுமை வழங்கி வருகிறது. கரோனா தொற்று, ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவளிக்கும் வகையில் இந்தக் கடினமான சூழ்நிலையிலும் எஃப்சிஐ தானிய சேமிப்புக் கிடங்குகள் அனைத்து நாட்களிலும் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து செல்லும் தானியங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாகப் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக எஃப்சிஐ கோட்ட மேலாளர் என்.ராஜேஷ் கூறும்போது, ''இதுவரை கோவையில் உள்ள 3 தானிய சேமிப்புக் கிடங்குகளில் இருந்து மட்டும் 7,735 மெட்ரிக் டன் அரிசி, 641 மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, கோவை கோட்டத்தின் கீழ் வரும் திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களிலும் இதேபோல் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை அந்த மாவட்டங்களுக்கு மொத்தம் 39,128 மெட்ரிக் டன் அரிசி, 4,787 மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய உணவுக் கழகமானது மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு உணவு தானியங்களை வழங்கத் தயார் நிலையில் உள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கு உணவளிக்கும் தொண்டு நிறுவனங்கள் அரிசி கிலோ ரூ.22க்கு பெற்றுக்கொள்ளலாம். வரும் 2022 மார்ச் 31 வரை இந்தச் சலுகை நடைமுறையில் இருக்கும். தொண்டு நிறுவனங்கள் குறைந்தபட்சம் 1 டன் வாங்க வேண்டும். அதிகபட்சம் 10 டன் வரை அரிசி வழங்கப்படும்.
இதுபோன்று கடந்த ஆண்டு தொண்டு நிறுவனங்களுக்கு, கோவையில் இருந்து 30 டன் அரிசி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாகச் சலுகையைப் பயன்படுத்தி அரிசி வாங்க வருவோர் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கோவை கோட்ட எஃப்சிஐ மேலாளர் (விற்பனைப் பிரிவு) பி.மணிகண்ட ஆறுமுகத்தை 9677122243 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.