திருநெல்வேலி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி இன்று தொடங்கியது.
தமிழகம் முழுவதும் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த சில நாட்ளுக்குமுன் தொடங்கி வைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் டோக்கன் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
திட்டமிட்டபடி மாவட்டம் முழுக்க இன்று கரோனா நிவாரண தொகை வழங்கும் பணிகள் ரேஷன் கடைகளில் தொடங்கின.
திருநெல்வேலி மாவட்டத்தில் 3,88,331 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் ஒரு நாளில் 200 பேருக்கு இத் தொகை வழங்கப்படும்.
பணகுடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு, திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் சா. ஞானதிரவியம் ஆகியோர் கரோனா நிவாரண நிதி வழங்கும் பணியை தொடங்கி வைத்தனர்.
நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பெரும்பத்து, களக்காடு கோட்டை பெரிய தெரு பகுதிகளில் கரோனா நிவாரண தொகை வழங்கும் பணியை சட்டப் பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன் தொடங்கி வைத்தார்.
பாளையங்கோட்டை மகாராஜநகர் ரேஷன் கடையில் சட்டப் பேரவை உறுப்பினர் அப்துல்வகாப் தொடங்கி வைத்தார்.
இதுபோல் திருநெல்வேலி தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினர் நயினார்நாகேந்திரன் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண தொகையை வழங்கினார்.