கன்னியாகுமரி மாவட்டத்தில் 2-வது நாளாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 1000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. தாமிரபரணியாறு, பழையாறு உட்பட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் கனமழை தீவிரமடைந்துள்ளது. சூறைகாற்றுடன் கனமழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
முழு ஊரடங்கால் மக்கள் பெரும்பாலானோர் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் மழையால் மக்கள் பாதிப்பில் இருந்து மீண்டனர். அதே நேரம் கனமழை நேற்று இரவில் இருந்து இன்று வரை 2வது நாளாக தொடர்ந்தது. அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 92 மிமீ., மழை பதிவானது.
பூதப்பாண்டியில் 40 மிமீ., சிற்றாறு
ஒன்றில் 78, களியலில் 60, கன்னிமாரில் 33, கொட்டாரத்தில் 36, குழித்துறையில் 74, மயிலாடியில் 58, நாகர்கோவிலில் 53, பேச்சிப்பாறையில் 71, பெருஞ்சாணியில் 81, புத்தன்அணையில் 80, சிவலோகத்தில் 68, சுருளகோட்டில் 70, தக்கலையில் 87, குளச்சலில் 64, இரணியலில் 22, பாலமோரில் 75, மாம்பழத்துறையாறில் 60, ஆரல்வாய்மொழியில் 20, அடையாமடையில் 57, குருந்தன்கோட்டில் 46, முள்ளங்கினாவிளையில் 87, ஆனைகிடங்கில் 57, முக்கடல் அணையில் 35 மிமீ., மழை பெய்திருந்தது. சராசரியாக மாவட்டம் முழுவதும் 61.27 மிமீ., மழை பதிவானது.
கனமழையால் மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவியது. சாலைகளிலும், கால்வாய், ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஏற்கனவே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் தடைகாலத்தை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு செல்லாமலே இருந்தனர்.
கனமழையால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1800 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வந்தது. அணையின் நீர்மட்டம் 43.45 அடியாக உயர்ந்ததை தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு 1000 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பழையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மலையோரங்கள், மற்றும் ஆற்றோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
பேச்சிப்பாறை அணை, தாமிரபரணி ஆறு ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஞாலம், தாழக்குடி, கருமன்கூடல் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான வாழைகள் சூறை காற்றில் சரிந்து விழுந்தன. கொல்லங்கோடு, நட்டாலம், தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. மலையோரம், மற்றும் சாலையோரம் நின்ற மரங்கள் சரிந்து விழுந்தன. இவற்றை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 57.80 அடியாக உயர்ந்தது. அணைக்கு உள்வரத்து 1510 அடியாக உயர்ந்துள்ள நிலையில் பொதுப்பணித்துறை நீர்ஆதார துறையினர் அணைப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையில் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டம் 3.3 அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் நாகர்கோவில் நகருக்கு கோடைநேரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டு அபாயம் நீங்கியது. புயல் எச்சரிக்கை மேலும் தொடர்வதால் குமரியில் தீவிர கண்காணிப்பு பணியில் பொதுப்பணித்துறை, வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பேரிடர் பகுதிகளில் தீயணைப்பு துறையினர் முகாம்; வெளிமாவட்டங்களில் இருந்து 4 குழுக்கள் வருகை
டவ் தே புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக முகாமிட்டுள்ளனர். குமரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு தலைமையில் 115 பேர் அடங்கிய 7 தீயணைப்பு குழுவினர் இரவு, பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் 4 தீயணைப்பு மீட்பு குழுவினர் குமரி வந்துள்ளனர். அவர்கள் பேரிடர் காலங்களில் தண்ணீர் சூழும் பகுதியான முஞ்சிறை, காஞ்சாம்பாறை, ஆற்றூர், குழித்துறை பகுதிகளில் முகாமிட்டு பேரிடர் மீட்புக்கு ஆயத்தமாகியுள்ளனர்.