புதுச்சேரியில் மேலும் 1,598 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதியானது. அத்துடன் 27 வயது இளம்பெண் உட்பட 20 பேர் சிகிச்சைப் பலனின்றி இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,119 ஆகியுள்ளது.
உயிரிழப்பில் தேசிய அளவில் புதுச்சேரி இரண்டாம் இடத்தில் தற்போது உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் 9,139 பேருக்குப் பரிசோதனை நேற்று செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 1,295, காரைக்கால் - 160, ஏனாம் - 103, மாஹே - 40 பேர் என மொத்தம் 1,598 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 12 ஆண்கள், 8 பெண்கள் என 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் வேல்ராம்பேட்டைச் சேர்ந்த 27 வயது இளம்பெண்ணும் ஒருவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,119 ஆக உள்ளது.
தேசிய விவரங்கள் அடிப்படையில் விசாரித்தபோது, "நாடு முழுவதும் கரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு வாரக் கணக்கெடுப்பின்படி புதுவை 2-வது இடத்தில் தற்போது உள்ளது. நாள்தோறும் சராசரியாக 53 பேர் உயிரிழப்புடன் கோவா முதலிடத்திலும், சராசரியாக 20 பேர் இறப்புடன் புதுவை 2-ம் இடத்திலும் உள்ளது" என்று குறிப்பிடுகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது ஜிப்மரில் 519 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 445 பேரும், கோவிட் கேர் சென்டரில் 722 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 15,011 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மாநிலம் முழுவதும் மொத்தம் 17,228 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று அதிகபட்சமாக 1,774 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 64,198 (77.77 சதவீதம்) ஆக உள்ளது.