தஞ்சை மாவட்டத்தில் கரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. ஆக்சிஜன் படுக்கைக்காக நோயாளிகள் சில மணி நேரம் காத்திருக்கும் சூழலில் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 32,903 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 27,637 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 4,891 நபர்கள் கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் மட்டுமே 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,250 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள நிலையில் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனால் புதிய தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாததால் வாகனங்களிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு வந்த நோயாளிகள் நேற்று இரவு முழுவதும் வெளியில் வாகனங்களிலேயே காத்திருந்தனர். பழைய நோயாளிகளின் படுக்கைகள் காலியான பிறகு அவர்களுக்கு இடம் கிடைப்பதாகவும், இதனால் சுமார் 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாக உறவினர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.