தமிழகத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால்குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களிலும் காணொலி மூலமாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமைநீதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை,தமிழகம் முழுவதும் உள்ள உரிமையியல் நீதிமன்றங்களுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளது. அவசர வழக்குகள் மட்டும் காணொலி மூலமாக விசாரிக்கப்படுகின்றன. ஆனால் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை கிடையாது. இதனால் இந்தநீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ரிமாண்ட் செய்வது,ஜாமீன் வழங்குவது, தீர்ப்பளிப்பது என குற்ற வழக்குகளின் விசாரணை வழக்கம்போல நேரடியாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் பணியாற்றும் நடுவர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என ஏராளமானோர் கரோனாபாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.கீழமை நீதிமன்ற ஊழியர்கள் பலர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 100-க்கும்மேற்பட்ட ஊழியர்கள் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளதுபோல குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களிலும் காணொலி காட்சி மூலமாக வழக்குகளை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு நீதித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.