‘பாசி’ வழக்கு விசாரணையை துரிதப் படுத்தக் கோரி, இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சார்பில் நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த ‘பாசி’ நிதி நிறுவனம், முதலீட்டுக்கு கூடுதல் வட்டி தருவதாகக் கூறி முதலீட்டாளர்கள் செலுத்திய ரூ.800 கோடிக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாக, கடந்த 2009-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மோகன்ராஜ், இயக்குநர்கள் கதிரவன், கமலவள்ளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, 2010 ஜனவரியில் இயக்குநர்களில் ஒருவரான கமலவள்ளி திடீரென மாயமானார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய அப்போதைய திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.அருண், கமலவள்ளியை அப்போதைய ஐ.ஜி. பிரமோத்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கடத்திச் சென்று ரூ. 2.98 கோடி பணம் பறித்தது கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஐ.ஜி. பிரமோத் குமார், அப்போதைய திருப்பூர் டி.எஸ்.பி. ராஜேந்திரன், மத்திய குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்கள் மோகன்ராஜ், சண்முகய்யா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
‘பாசி’ நிதி நிறுவன மோசடி வழக்கு, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸுக்கும், காவல் அதிகாரிகள் மீதான வழக்கு சிபிசிஐடி-க்கும் மாற்றப்பட்டன. பின்னர், சிபிஐ-க்கு மாற்றம் செய்ய வேண்டும் என முதலீட்டாளர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது.
வழக்கில் கைது செய்யப்பட்ட கமலவள்ளி, பெண் என்ற அடிப்படை யில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்தது. ஆனால், மோகன்ராஜ், கதிரவன் ஆகிய இருவரும் தற்போது வரை சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். மோகன்ராஜ், சேலம் மத்திய சிறையிலும், கதிரவன் கோவை மத்திய சிறையிலும் அடைக் கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை கோவை முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நீதிபதி (பொறுப்பு) சந்திரசேகரன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. கதிரவன் மட்டும் வழக்கில் ஆஜரானார். வழக்கு விசார ணையின்போது, சிபிஐ தரப்பில் மனு ஒன்றை அரசு வழக்கறிஞர் செல்வராஜ் தாக்கல் தாக்கல் செய்தார்.
வழக்கின் மீது இதுவரை 81 புகார்தாரர்கள் விசாரிக்கப்பட்டு, 312 ஆவணங்கள் மட்டுமே பார்வையிடப் பட்டுள்ளது. கடைசியாக வழக்கின் விசாரணை ஜனவரி 24-ம் தேதி நடைபெற்றது. அதன்பின்னர் நடை பெறவில்லை. வழக்கில் மீதமுள்ள சாட்சியங்களையும் விசாரிக்க விசாரணையை துரிதப் படுத்த வேண்டியது அவசியம். அப்போது மட்டுமே வழக்கில் தொடர்புடை யவர்களுக்கு உரிய காலத்தில் தண்டனை பெற்றுத் தர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு பின்னர் வழக்கின் மீதான மறு விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதனிடையே, ‘பாசி’ வழக்கில் புகார் அளித்துள்ள 500-க்கும் மேற்பட் டோர் நீதிமன்றத்தில் புதன்கிழமை முற்றுகையிட உள்ளதாக தெரிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.