டைம்ஸ் குழுமத்தின் தலைவர் இந்து ஜெயின் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டைம்ஸ் குழுமத் தலைவர் இந்து ஜெயின், கரோனா தொற்று காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: டைம்ஸ் குழும தலைவர், பத்மபூஷன் விருதுபெற்ற இந்து ஜெயின் மறைவுச் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். அவர் நீண்ட நாட்களாக ஆன்மிக சொற்பொழிவாளராகவும், கலைகளின் புரவலருமாக இருந்தார்.
பெண்களுக்கான உரிமைகளுக்காவும் போராடினார். அவரது அயராத உழைப்பு, தயாள குணம், சமூக சேவை முயற்சிகள் மற்றும் நமது கலைகளை காக்கும் பணிகளுக்காக அவரை நாடு எப்போதும் மறவாது. அவரது மறைவு நாட்டுக்கு, குறிப்பாக டைம்ஸ் குழுமத்தினருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: டைம்ஸ் குழுமத்தின் தலைவர் இந்து ஜெயின், கரோனா தொற்றுபாதிப்பால் மரணமடைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
ஆன்மிக நாட்டம் கொண்டவராகவும், கலைகளின் புரவலருமாக விளங்கிய இந்து ஜெயின், தமது சேவைகளுக்காக பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளார். அவரது மறைவு பத்திரிகை உலகுக்கு மட்டுமின்றி சமூகசேவையில் ஆர்வம் கொண்டஅனைவருக்கும் பேரிழப்பாகும்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், டைம்ஸ் குழும நிர்வாகிகள், பணியாளர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.