கோவில்பட்டியில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டு, போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேற்று மாலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 
தமிழகம்

46 குப்பி ரெம்டெசிவிர் மருந்து பறிமுதல்: கள்ளச்சந்தையில் விற்க முயன்ற இருவர் கைது

செய்திப்பிரிவு

கோவில்பட்டியில் கள்ளச் சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 46 குப்பி ரெம்டெசிவிர் மருந்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பெருநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் டோக்கன் கொடுத்து, நோயாளியின் விவரங்கள் மற்றும் ஆதார் எண் பெற்ற பின்னரே ரெம்டெசிவிர் வழங்கப்படுகிறது.

கோவில்பட்டியில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக, காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. டிஎஸ்பி கலைக்கதிரவன், மேற்கு காவல் நிலைய போலீஸார் மற்றும் கோவில்பட்டி சுகாதாரத்துறை துணை இயக்குநர் அனிதா உள்ளிட்டோர் நேற்றுமுன்தினம் இரவுகோவில்பட்டி ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையில் உள்ள தனியார் மொத்த மருந்து விற்பனையகத்தில் சோதனை நடத்தினர்.

அங்கு 46 குப்பி ரெம்டெசிவிர் மருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. மருந்தகத்தின் உரிமையாளர்களான ஆறுமுக நயினார்மகன்கள் கணேசன் (30), சண்முகம் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஒரு குப்பியில் 3 டோஸ் மருந்து இருக்கும். இந்த மருந்தை ஒரு டோஸ் ரூ. 20 ஆயிரம் என, தனியார் மருத்துவமனைக்கு விற்பனை செய்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஒரு டோஸ் ரூ. 40 ஆயிரம் வரை விற்பனை செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட 46 குப்பி ரெம்டெசிவிர் மருந்துக்கான அரசு நிர்ணயித்த விலை ரூ.2.15 லட்சம். இவர்களிடம் ரெம்டெசிவிர் மருந்து வாங்கிய 3 தனியார் மருத்துவமனைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT