கரோனா காலத்தில் தன்னார்வலர்கள் பலரும் வெவ்வேறு வகைகளில் தங்களால் இயன்ற சேவைகளை மேற்கொண்டு வரும் நிலையில், விக்கிரமசிங்கபுரத்தில் வசிக்கும் முன்னாள் அரசுத்துறை அதிகாரி மூர்த்தி (69), குருவிகளுக்கான கூடுகளை தன்கைப்பட உருவாக்கி இலவசமாக வழங்கி வருகிறார்.
புள்ளியியல் துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் மூர்த்தி. ஓய்வு பெற்றதில் இருந்து, கடந்த 10 ஆண்டுகளாக சமூகப்பணிகளில் இடைவிடாது ஈடுபட்டுவந்தார். பாபநாசத்தில் தாமிரபரணி படித்துறைகளில் தண்ணீருக்குள் புதையுண்டு இருக்கும் துணிகளை அகற்றும் மிகப்பெரும் சேவையை கடந்த பல ஆண்டுகளாகவே மேற்கொண்டார். ஆற்றுக்குள் அபாயமான பகுதிகளை அடையாளம் கண்டு, அப்பகுதியில் எச்சரிக்கை பலகைகளை வைத்திருக்கிறார். இதற்கெல்லாம் தனது சொந்த பணத்தை செலவிட்டு வருகிறார்.
கடந்த ஓராண்டுக்கு மேலாக கரோனா தொற்று பரவல் காரணமாக இச்சேவையை இவரால் தொடரமுடியவில்லை. தற்போது, குருவிக் கூடுகளை தயாரித்து, பறவை ஆர்வலர்களுக்கு இலவசமாக வழங்கி கொண்டிருக்கிறார். வீடுகளில் கூடுகளை வைத்து குருவிகளை தங்க வைப்பதால் விளையும் நன்மைகள் குறித்து அவர் கூறியதாவது:
அதிகாலையில் குருவிகள் கீச்சிடுவதை கவனித்தால் மன அமைதி ஏற்படும். அவை மனிதர்களோடு உறவாடத் துடிக்கும். மனையுறைக்குருவி, உள்ளுறைக் குருவி, உள்ளூர் குருவி என்ற குறிப்புகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. சிறிது தானியம், சோறு, தண்ணீரை ஒரு வாரம் வைத்துப் பாருங்கள். நம்மைக் கண்டு பயப்படாமல் அவை அருகில் வந்து நிற்கும்.
வீட்டுக்குள் வரும் பூச்சிகளை அழித்துவிடும். பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளி, கம்பளி புழு போன்ற மற்ற பூச்சிகளை தின்று, விவசாயிகளுக்கும், நமக்கும் பல நன்மைகளைச் செய்கின்றன. ஒருகாலத்தில் படைபடையாக திரிந்த குருவிகளை இன்று காணமுடியவில்லை. அதிக ரசாயன மருந்து தெளிப்பது, கூரை வீடுகள் இல்லாதது, மரங்கள், மண்புழு இல்லாத காரணங்களால் குருவிகள் அழிந்துவிட்டன.
முன்பு நம் விவசாயிகளிடம் நாள்கதிர் செய்யும் முறை இருந்தது. அதாவது அறுவடைக்கு முன், நல்ல நாள் பார்த்து, சில கதிர்களை அறுத்து கோயில்களிலும், வீடுகளிலும் கட்டி தொங்க விடுவர். அக்கதிர்களை குருவிகள் வந்து தின்றன. இன்று பலரிடம் இப்பழக்கம் இல்லை. எல்லாமே இயந்திர அறுவடையாகிவிட்டது. வீட்டு மின்விசிறியில் அடிபடுவது மற்றும் கதிர்வீச்சு காரணங்களாலும் குருவிகளின் எண்ணிக்கை அருகி வருகிறது. எஞ்சியுள்ள குருவிகளை காப்பது நம் கடமை.
ஓர் அட்டை பெட்டி அல்லது ஓலை மிட்டாய்ப் பெட்டியில் சிறிய ஓட்டை போட்டு, சிறிது வைக்கோலை வைத்து, நனையாதபடி தாழ்வாரம் அல்லது ஜன்னல் பக்கம் கட்டிவிட்டால் சில நாட்களில் அவற்றில் குருவி தங்கிவிடும் என்று தெரிவித்தார். குருவிக் கூடுகளை இலவசமாக இவரிடமிருந்து பெறுவதற்கு 99423 07679 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.