புதுச்சேரி, காரைக்காலில் ஐந்து தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர ஒதுக்கும் சுகாதாரத்துறை கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் தந்துள்ளார்.
இதன் மூலம், கரோனா நோயாளிகளுக்காக சுமார் 3 ஆயிரம் படுக்கைகள் ஒதுக்கப்பட உள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று இரவு இரு கோப்புகளுக்கு ஒப்புதல் தந்துள்ளார்.
அதன்படி, புதிய கரோனாவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளான லட்சுமி நாராயணா மருத்துவமனை, வெங்கடேஸ்வரா மருத்துவமனை, அறுபடை மருத்துவமனை, பி்ம்ஸ் மருத்துவமனை, காரைக்கால் விநாயகா மருத்துவ மிஷன் கல்லூரி ஆகியவற்றில் உள்ள படுக்கைகளை 100 சதவீதம் கரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள் ஒதுக்க சுகாதாரத்துறை அளித்த பரிந்துரையை ஏற்று ஆணை பிறப்பித்து ஒப்புதல் அளித்தார்.
இதில் சுமார் 3 ஆயிரம் மேற்பட்ட படுக்கைகளை ஒதுக்கப்பட உள்ளது.
கரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு ரூ. 7.37 கோடி சுவாச கருவிகள் வாங்கவும், மருத்துவ பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் பரிந்துரைக்கு ஒப்புதல் தந்துள்ளார்.