புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அருகே உள்ள மூள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகரன் மகன் ஞானபாண்டியன் (36). 'மக்கள் பாதை' எனும் அமைப்பில் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி, 3 மகள், 1 மகன் உள்ளனர்.
இந்நிலையில், காய்ச்சல், உடல் வலி, மூச்சுத் திணறலால், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் ஞானபாண்டியன் சேர்க்கப்பட்டார். அன்றைய தினமே கரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுக்கப்பட்டது.
தொடர்ந்து, 301-வது வார்டில் சேர்க்கப்பட்டிருந்தார். தினமும் மூச்சுத் திணறலால் ஞானபாண்டியன் அவதிப்பட்டு வந்துள்ளார். எனினும், இவருக்கு ஆக்சிஜன் சிகிச்சை வழங்கவில்லை எனவும், இதை மேற்கொள்ளுமாறு உறவினர்கள் வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஞானபாண்டியன் உயிரிழந்துவிட்டார்.
"கரோனா பரிசோதனை முடிவு வரவே 2 நாட்களாகிவிட்டது. அதுவரை ஆக்சிஜன் சிகிச்சை உள்ளிட்ட உயிர் காக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.
இவ்வாறு, பரிசோதனை முடிவுகள் வருவதில் ஏற்பட்ட தாமதத்தினாலும், அதுவரை உரிய சிகிச்சை அளிக்க மறுத்ததுமே ஞானபாண்டியன் உயிரிழப்புக்குக் காரணம்" என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதையொட்டி, மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளர் மதியழகன் தலைமையில் உறவினர்கள், பொதுமக்கள் மருத்துவமனை அருகே இன்று (மே 14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், போலீஸார் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, ஞானபாண்டியனின் உடல் புதுக்கோட்டை மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.