தமிழிசை சவுந்தரராஜன். 
தமிழகம்

கோவிட் சிகிச்சைக்காக 50 படுக்கைகளுடன் கூடிய ஆயுஷ் மருத்துவமனை புதுச்சேரியில் திறப்பு: குழந்தைகளுக்குத் தனி வார்டு

செ.ஞானபிரகாஷ்

கரோனா சிகிச்சைக்காக 50 படுக்கைகளுடன் கூடிய ஆயுஷ் மருத்துவமனை புதுச்சேரியில் திறக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கரோனா சிகிச்சைக்கான ஆயுஷ் மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு 50 படுக்கை வசதிகளுடன் கரோனா பாதிப்புள்ளவர்களுக்கு இந்திய மருத்துவ முறையான சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதியில் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இந்த மருத்துவமனையைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (மே 14) திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது:

"கரோனாவைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரித்து வருகிறோம். புதுவை அரசு பொது மருத்துவமனையில் 300 ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்கியுள்ளோம். அதேபோல், இஎஸ்ஐ மருத்துவமனை, கோரிமேடு அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும் ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

யாரும் படுக்கைக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை. மத்திய அரசு மூலம் நமக்கு 100 ஆக்சிஜனேட்டர்களும், ஜிப்மருக்கு 70 ஆக்சிஜனேட்டர்களும் கிடைத்துள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தபட்சம் 100 முதல் அதிகபட்சமாக 300 ஆக்சிஜன் படுக்கைகள் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளோம்.

மக்கள் பங்களிப்போடு ஒரு ஆக்சிஜன் படுக்கைக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இத்திட்டத்தின் கீழ் நிறையப் பேர் உதவ முன்வருகின்றனர்.

மக்களின் ஒத்துழைப்புடன்தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். தற்போது 40 பாண்லே பாலகங்கள் மூலம் ரூ.5-க்கு உணவும், ரூ.1-க்கு முகக்கவசமும், ரூ.10-க்கு சானிடைசரும் வழங்கப்படுகிறது. இவ்வளவு நடவடிக்கை எடுத்த பின்பும் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

மீண்டும் தடுப்பூசி திருவிழா தொடக்கம்

பெருந்தொற்றுக் காலத்தில் நாம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால், தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதம். அதிகமாகத் தடுப்பூசி போடுவது மட்டுமே நம்மை கரோனாவில் இருந்து பாதுகாக்கும். அதிகமாகத் தடுப்பூசி போட்ட நாடுகளில் முகக்கவசம் இல்லாமல் மக்கள் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

மத்திய அரசு சரியான நேரத்தில் தடுப்பூசி கொடுத்தது. ஆனால், மக்களிடம் இருந்த தயக்கம் தடுப்பூசி திட்டத்தைத் தாமதப்படுத்திவிட்டது. இது மிகவும் வருந்தத்தக்கது. மறுபடியும் தடுப்பூசி திருவிழா இன்று தொடங்கப்பட்டு 60 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதுவரை 2.22 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 1.40 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவில்லை.

ஏற்கெனவே 6 லட்சம் தடுப்பூசிகள் ஆர்டர் கொடுத்துள்ளோம். தற்போது 30 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்வதற்கான போர்ட்டலில் உள்ள பிரச்சினை சரி செய்யப்பட்டவுடனே அவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்படும். இப்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

இந்திய முறை மருத்துவம் சார்ந்த சிகிச்சை மையங்கள் புதுச்சேரியில் புதிதாக அமைக்கப்படவுள்ளன. மத்திய ஆயுஷ் மருந்தகம் சில இயற்கை மருந்துகள் கரோனாவுக்கு நல்ல பலனைத் தருவதாக அறிவித்துள்ளது. அப்படிப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் இங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும்.

குழந்தைகளுக்குத் தனி வார்டு

குழந்தைகளுக்கும் கரோனா தொற்று ஏற்படுவதால் தனியாக வார்டு தயார் செய்து வைத்துள்ளோம். இருப்பினும், குழந்தைகள் அனுமதிக்கப்படும் அளவுக்கான சூழல் வரக்கூடாது என இறைவனை வேண்டுகிறேன். வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்று விட்டு வருவதால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, வெளியே செல்வதை முடிந்த அளவுக்குத் தடுக்க வேண்டும். எல்லோரும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். கரோனா பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு ஊக்கத்தொகை தர முயற்சி எடுக்கப்படும்".

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT