நடிகர் அஜித், கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. நேற்று (மே 13) மட்டும் தமிழகத்தில் 30,621 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அஜித், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 14) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கும், இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கும் தமிழ்நாடு அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவை உள்ளது.
எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவிட முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
அந்த வேண்டுகோளுக்கேற்ப, திரைப்பட நடிகர் அஜித் குமார், கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, ஆன்லைன் பரிமாற்றம் மூலமாக 25 லட்சம் ரூபாய் வழங்கினார்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.