தமிழகம்

திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி; மறு பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஆய்வு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

ஜெ.ஞானசேகர்

திருச்சி பெல் ஆலையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை முதல்வர் அறிவுறுத்தலின்படி, மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து அங்கு ஆய்வு நடத்தப்படும் என்று மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் கரோனா நிவாரண உதவித்தொகையின் முதல் தவணை வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மக்களவை உறுப்பினர் எஸ்.ஜோதிமணி, எம்எல்ஏக்கள் அ.சவுந்தரபாண்டியன், எஸ்.ஸ்டாலின் குமார், எம்.பழனியாண்டி, சீ.கதிரவன், எஸ்.இனிகோ இருதயராஜ், ந.தியாகராஜன், பி.அப்துல் சமத் மற்றும் அரசின் நிதித் துறை சிறப்புச் செயலரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான ரீட்டா ஹரிஸ் தக்கர், மாநகரக் காவல் ஆணையர் ஏ.அருண், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அ.மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தைத் தொடங்கிவைத்து அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, "மக்கள் பாதிக்கப்படாத வகையில் கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். சித்த மருத்துவ முறையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி பெல் ஆலையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆய்வு செய்யுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன் பேரில் அங்கு ஆய்வு நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, "பெல் ஆலையில் 1980-ல் ஆக்சிஜன் ஆலை நிறுவப்பட்டு 2016 வரை உற்பத்தி நடைபெற்று வந்துள்ளது. உதிரி பாகங்கள், துணைக் கருவிகள் கிடைக்காததால் மூடி வைத்துள்ளனர். புதிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை நிறுவ என்ன செய்ய வேண்டும், அரசிடமிருந்து என்னென்ன உதவிகள் வேண்டும் என்று ஆலையின் நிர்வாக இயக்குநரிடம் கலந்து ஆலோசனை நடத்த உள்ளோம்.

கரோனா பணியில் தமிழ்நாட்டுக்கும், திருச்சி மாவட்டத்துக்கும் திருவெறும்பூர் தொகுதியின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். இந்த அரசின் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமானதாக இருக்கும். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் தொலைநோக்குப் பார்வையுடன் எங்களது செயல்பாடுகள் இருக்கும்" என்று தெரிவித்தார்.

ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு கரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2,000 வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கிவைத்தனர். கரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக திருச்சி மாவட்டத்தில் 1,226 ரேஷன் கடைகள் மூலம் 8,07,165 ரேஷன் அட்டைதாரர்களுக்கு மொத்தம் ரூ.161.43 கோடி வழங்கப்பட உள்ளது.

SCROLL FOR NEXT