பறிமுதல் செய்யப்பட்ட ரெம்டெசிவிர் மருந்துகள். 
தமிழகம்

கோவில்பட்டியில் கள்ளச்சந்தையில் விற்பதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 46 குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்து பறிமுதல்

எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டியில் கள்ளச்சந்தையில் விற்பதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 46 குப்பி ரெம்டெசிவிர் மருந்துகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் கரோனா 2-வது அலை பாதிப்பு அதிகமாக உள்ளது. நேற்று (மே 13) மட்டும் தமிழகத்தில் 30,621 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பெருநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் டோக்கன் கொடுத்து, நோயாளியின் விவரங்கள் மற்றும் ஆதார் எண் பெற்ற பின்னரே, ரெம்டெசிவிர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவில்பட்டியில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளைப் பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக, துணை காவல் கண்காணிப்பாளர் கலை கதிரவனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரது தலைமையில் மேற்கு காவல் நிலைய போலீஸார் மற்றும் கோவில்பட்டி சுகாதாரத்துறை துணை இயக்குநர் மருத்துவர் அனிதா உள்ளிட்டோர் கொண்ட குழு நேற்று இரவு (மே 13) கோவில்பட்டி ஏ.கே.எஸ்.தியேட்டர் ரோட்டில் உள்ள தனியார் மொத்த மருந்து விற்பனையகத்துக்குச் சென்றனர்.

மருந்து விற்பனையகத்தைத் திறந்து சோதனையிட்டபோது அங்கு 46 குப்பி ரெம்டெசிவிர் மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, அந்த மருந்தகத்தின் உரிமையாளர்களான கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்கத் தெருவைச் சேர்ந்த கணேசன் (30), சண்முகம் (27) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர்.

இதில், தற்போது கரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், ரெம்டெசிவிர் மருந்துக்கு ஏற்பட்டுள்ள தேவைகளைப் பயன்படுத்தி, அந்த மருந்துகளைப் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்றது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 46 குப்பி ரெம்டெசிவிர் மருந்துக்கான அரசு நிர்ணயித்த விலை ரூ.2.15 லட்சமாகும். இதனை சுமார் ரூ.30 லட்சத்துக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, சண்முகம், கணேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அந்த மருந்தகத்தில் பணியாற்றிவரும் கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த அண்ணாமலை (29) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்களிடம் ரெம்டெசிவிர் மருந்து வாங்கிய 3 தனியார் மருத்துவமனைகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை செய்வதில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT