கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி கரோனா தடுப்புப் பணிகளுக்கு தாராளமாக நிதி உதவி அளித்து வருகிறது.
முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோளைத் தொடர்ந்து மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை வங்கி அளித்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில் பல்வேறு கட்டங்களில் நிதி உதவி அளித்துள்ளது. கும்பகோணம் மாநகராட்சிக்கு முகக் கவசம், சானிடைசர், கையுறைகள் வாங்க ரூ.12,95,371, ஏழைகளுக்கு அரிசி மற்றும் சானிடைசர் வாங்க ரூ.36,63,622, கிராமப் பகுதிகளில் நிவாரணப் பொருள்கள் வாங்க ரூ.4,76,308, கும்பகோணத்தில் கரோனா நிவாரண மையங்களில் அடிப்படை வசதிகளை உருவாக்க ரூ.25,85,000, நாமக்கல் பகுதியில் கரோனா நிவாண நடவடிக்கைகளுக்கு ரூ.5,00,000, தஞ்சாவூர் துணை ஆட்சியர் நிவாரணத்துக்கு ரூ.2,84,934, கும்பகோணம் நகராட்சி ஆணையரிடம் ரூ. 13,76,148, திருச்சி, கும்பகோணம், பெங்களூரு நகரங்களில் முகக் கவசம், சானிடைசர், பிபிஇ உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்கு ரூ.18,71,660 செலவிடப்பட்டுள்ளது.
நகராட்சிகளுக்கு நிதி
தற்போது இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் சூழலில் திருநெல்வேலிக்கு கரோனா நிவாரண மையங்களுக்கு ரூ.7,94,023, கும்பகோணம் நகராட்சிக்கு ஆக்சிஜன் உள்ளிட்ட கருவிகள் வாங்க ரூ.35,00,000, தஞ்சை ஆட்சியரிடம் ஆக்சிஜன் உபகரணங்கள் வாங்க ரூ.94,48,000 அளிக்கப்பட்டுள்ளது.
பெருந்தொற்று பரவலைக்கட்டுப்படுத்த நிறுவனங்களுக்கான சமூக பொறுப்பை உணர்ந்து அதற்கான பணிகளை செவ்வனே சிட்டி யூனியன் வங்கி மேற்கொண்டு வருவதாக வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.