உலகில் ஆதாம் முதல் இதுவரை தோன்றி மறைந்துள்ள 4 ஆயிரம் கோடி மனிதர்களில் பூவுலகில் செல்வாக்கு பெற்ற நூறு பேர்களைத் தேர்வு செய்து, அமெரிக்க அறிஞர் மைக்கேல் ஹெச்.ஹார்ட், கி.பி.1978-ல் எழுதி வெளியிட்ட ‘The 100’ என்ற நூலில் முதல் இடத்தை அண்ணல் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்குத் தந்துள்ளார்.
மனித குலத்தின் முதலிடம்
திருத்தப்பட்ட அந்த நூலின் இரண்டாம்பதிப்பில் முன்னர் கூறிய நூறு பேர்களில்வரிசை முறையை மாற்றி சிலரை முன்னுக்கும், சிலரைப் பின்னுக்கும் தள்ளியுள்ளார். அதற்கான காரணங்களையும் கூறியுள்ளார். ஆனால் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் முதல் இடம் மாறாமல் அப்படியேஅந்த நூலில் உள்ளது. “உலகம் உள்ளளவும் மனித குலத்தின் தலைமை நிலை முதலிடம் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கே” உரியது என்பதைச் சொல்லாமல்சொல்கிறார் அமெரிக்க அறிஞர்.
உலகியல் - சமயம் என 2 நிலைகளிலும் மகத்தான வெற்றியின் வரலாற்றில் ஒருசேரப் பெற்றவர் முஹம்மது நபி(ஸல்). கி.பி.570-ல் ரபிஉல் அவ்வல் மாதத்தில் தோன்றி கி.பி.632-ல் ரபிஉல் மாதத்தில் பூவுலகிலிருந்து மறைந்த முஹம்மது நபி(ஸல்) 63 வருடங்கள் 4 நாட்கள் இப்புவியில் வாழ்ந்தார்கள்
உலக பெரும் மதங்களில் ஒன்றான இஸ்லாம் மார்க்கத்தை நிறுவி அதைப் பரப்பிய தலைவரான முஹம்மது நபி (ஸல்) மறைந்த வேளையில் சில லட்சம்முஸ்லிம்களே இருந்தனர். அமெரிக்காவின் ‘பியூ’ (PEW) நிறுவனம் 2010-ல் உலகமுஸ்லிம் தொகை 161 கோடி என்கிறது. இது உலக மக்கள் தொகையில் (690 கோடி) 23.4 சதவீதம் ஆகும்.
உலகில் தோன்றிய தத்துவம் அல்லது கோட்பாடு நிற்பதும், நிலைப்பதும் அதன் எதார்த்த நிலையைப் பொறுத்ததாகும். சரியான வழிகாட்டுதல், அறியாமை அகலகைகொடுத்தல் இவைகளைப் பொறுத்ததே அது நிலை நிற்கும். உலகத்தையும் அதிலுள்ள உயிர்களையும், படைப்புகளையும், படைத்து, பரிபாலிக்கிற சர்வவல்லமை, சர்வஞானம் உள்ளவனாகவும், அகிலத்தில் யாருக்கும் அவன் சமமாகஇல்லை, அவன் ஒருவனே வணக்கத்துக்குரியவன் என்றும் ஏக இறைக்கொள்கையை, அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த அரபு நாட்டில் அண்ணல் நபி (ஸல்) தொடக்க காலங்களில் மறைவாகவே செய்தார்.
கி.பி.613-ல் இறைக்கொள்கையை பகிரங்கமாகப் போதனை புரிந்தார். அதிகார வர்க்கத்தினர் மக்காவில் அண்ணலார்(ஸல்) அவர்களுக்கு அபாயகரமான, அதிகமான தொல்லைகளை அடுத்தடுத்துத் தந்தனர். அமைதிகாத்த அண்ணலார் கி.பி.622-ல் மக்காவிலிருந்து மதீனா (யத்ரிப்)வுக்குப் புலம்பெயர்ந்தார். இதிலிருந்து ஹிஜ்ரி வருடம் கணக்கிடப்படுகிறது. நபியின் பட்டணமான மதீனாவில் மார்க்கப் பிரச்சாரத்தை முழு மூச்சுடன் தொடர்ந்தார்கள்.
ஏற்கெனவே ஏக இறைக் கொள்கையான ‘கலிமாவும்’ இறைவனை வணங்கும் ‘தொழுகையும்’ முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டிருந்தது. முஹமது நபி(ஸல்) மதீனா வந்த மறு ஆண்டில் நோன்பும், ஜக்காத்தும் (கட்டாயக் கொடை செல்வ வரி, மார்க்க வரி) கடமையாக்கப்பட்டது. ஹிஜ்ரி 9-வது ஆண்டில் புனிதப் பயணமான ஹஜ்ஜும் ஐந்தாவது கடமையானது.
‘ரமலான்’ பெயர் காரணம்
அரேபியர் ஆதியில் மாதங்களுக்குப் பெயரிட்டபோது அந்தக் காலகட்டத்தின் தட்பவெப்ப நிலைமைகளைக் கவனித்துப் பெயரிடும்போது, அதிக வெய்யிலும், வெப்பமும் கொண்ட மாதத்துக்கு ‘ரமலான்’ என்று பெயரிட்டனர். முஹர்ரம், ஸஃபர், ரபீஉல்அவ்வல், ரபீஉல் ஆகிர், ஜமாதுல் அவ்வல், ஜமாதுல் ஆகிர், ரஜப்,ஷஃபான் என 8 மாதங்களைத் தொடர்ந்து ஒன்பதாவதாக ரமலான் மாதம் வருகிறது. அடுத்தடுத்து ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் என வரும்.
‘ரமலான்’ என்ற சொல்லுக்கு ‘கரிப்பது’,‘பொசுக்குவது’ என்று பொருள். ‘அஸ்ஸௌம்’ என்ற அரபு பதத்துக்கு ‘செய்து கொண்டிருக்கும் வேலையைச் செய்யாது நிறுத்திக் கொள்ளல்’ என்பதாகும். ‘உண்ணல்’, ‘பருகல்’, ‘உடல் இன்பங் கொள்ளல்’ஆகிய காரியங்களிலிருந்து விலகி பகல் முழுவதும் நோன்பு நோற்பது ரமலான். முதல் பிறை பார்த்து தொடங்கும் அத்தூய கடமை, ஷவ்வால் மாத பிறையைப் பார்த்ததும் நிறைவடையும்.
இம்மாதத்தின் முதல் 10 நாட்கள் இறைவனின் ‘ரஹ்மத்’ (அருள்) ஆகவும், நடுப்பகுதி பாவமன்னிப்பாகவும், கடைப்பகுதி நரக நெருப்பிலிருந்து விடுதலை பெறுவதாகவும் அமைகிறது என்பது நம்பிக்கை.
நபி இப்ராகிம் (அலைஹிவஸல்லம்) (ஆப்ரகாம்) அவர்களுக்கு வேத ஏடுகள் ரமலான் முதல்நாளில் அருளப்பட்டது. புனித மக்காவில் ‘ஹிரா’ குகையில் நோன்புநோற்று தவமிருந்த நிலையில் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு ஹஸ்ரத் ஜிப்ரயில் (அலை) மூலம் முதன்முதலாக ரமலான் 27-ம் நாளில் திருக்குர்ஆனின் பகுதி வழங்கப்பட்டது. சமய சந்தர்ப்பத்துக்கேற்ப 23 வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக திருக்குர்ஆன் இறைவனால் இறக்கியருளப்பட்டது.
மனித வர்க்கத்துக்கு அருட்கொடை
உலக மக்கள் இம்மையிலும் (இப்புவி வாழ்வு) மறுமையிலும் (மறு உலக வாழ்வு) மகிழ்ச்சியாக வாழ்வதற்கான மகத்தான வாழ்க்கைத் திட்டமாக மனித வர்க்கத்துக்கு அருட்கொடையாக திருக்குர்ஆன் இருக்கிறது; இருக்கும். ரமலானில் இந்த அருட்கொடையைத் தங்களுக்குத் தந்ததற்கு நன்றி செலுத்திட, ரமலான்மாதத்தில் இஸ்லாமியர் ஐம்பெருங்கடமைகளில் ஒன்றான நோன்பை நோற்று நிறைவடையைச் செய்து இறைவனின் கட்டளையை பரிபூரணமாகச் செய்திட்ட மகிழ்வால், இன்று ஈத் பெருநாளை உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
கரோனாவிலிருந்து உலகம் விடுபடட்டும்
‘பிறையை உன்னுள் பூரணச்சந்திரன் பொதிந்து கிடக்கிறான்’ என்பார் அல்லாமா இக்பால். மகிழ்வுடன் பிறை பார்த்துபெருநாள், கொண்டாடினாலும் மனதில் உலகை அச்சுறுத்தும் ‘கரோனா’ தீ நுண்மிகொடுமையிலிருந்து உலகம் விடுபடட்டும்! முகம்மது நபி(ஸல்) மொழிவார்கள்: ‘‘நன்மையையும் வழிகாட்டலையும் கொண்ட புதுப்பிறையே! உன்னைப் படைத்தவனுக்கே என் விசுவாசம்!’’ (அஹ்மத்இப்ன் முஹம்மத் இப்ன்ஹன்பல் 5:329)
ஷவ்வால் பிறையே! சர்வலோகத்துக்கும் வந்து சுபிட்சத்தைக் கொண்டு தருவாயாக!