கரோனா பொது நிவாரண நிதிக்கு பெரியார் அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படுவதோடு, கரோனா சிகிச்சைக்காக சென்னை பெரியார் மணியம்மை மருத்துவமனை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
கரோனா கொடுந்தொற்றின் 2-ம் அலையின் வீச்சு நாளுக்குநாள் அதிகமாகி, பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருவது வேதனை அளிக்கிறது.
இந்நிலையில், சென்னை பெரியார் திடலில் கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதி ஏழை, எளிய மக்களுக்கு உதவி வரும் பெரியார் மணியம்மை மருத்துவமனை என்ற சிறிய மருத்துவமனையை கரோனா தொற்று நோயாளிகளுக்கான சிகிச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
இங்குள்ள 30 படுக்கை வசதியை சுகாதாரத் துறை அதிகாரிகள் மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிடுவார்கள் என்று நம்புகிறோம். ‘இருட்டைக் குறை கூறுவதைவிட, ஒரு சிறு மெழுகுவத்தியை ஏற்றுவது சிறந்தது’ என்பது போன்ற மிகவும் எளிமையான சிறு துளி முயற்சி இது. மற்றவர்களும் வாய்ப்புள்ள இடங்களில் இம்முறையைப் பின்பற்ற வேண்டும்.
பெரியார் அறக்கட்டளைகள் சார்பில் ரூ.10 லட்சம் நன்கொடையையும் முதல்வரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு அளிக்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.