சென்னையில் இன்று முதல் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும். ஊரடங்கை அமலாக்க உருவாக்கப்பட்ட குழுக்கள் 30-ஆக உயர்த்தப்பட உள்ளன என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை கடுமையாக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அக்கூட்டத்தில், “ஊரடங்கு அமலாக்க குழுவினர், தங்கள் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு அரசின் கரோனா பதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து அரசின் வழிமுறைகளை பின்பற்றாத கடைகளை மூடி சீல் வைக்க வேண்டும். முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்களிடமிருந்து அபராதம் வசூலிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டது.
பின்னர் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த கூட்டத்தில் ஊரடங்கை அமலாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்போது மாநகராட்சி வருவாய் அதிகாரிகள், மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட ஊரடங்கு அமலாக்க குழுக்கள் மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 குழுக்கள் இயங்கி வருகின்றன. இதை 30 ஆக உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தீவிரமாக கண்காணிக்கும்
மேலும் மே 14 (இன்று) முதல் சென்னையில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும். பொதுமக்கள் அருகில் உள்ள காய்கறி, மளிகை கடைகளுக்கு நடந்து சென்றுதான் பொருட்களை வாங்க வேண்டும். வாகனத்தில் சுற்றுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அதை ஊரடங்கு அமலாக்க குழு தீவிரமாக கண்காணிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் சென்னை காவல்துறை அதிகாரிகள் த.செந்தில்குமார், என்.கண்ணன், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சங்கர்லால் குமாவத், ஜெ.மேகநாதரெட்டி, ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.