தமிழகம்

நெல்லை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் கரோனா நோயாளிகள் உயிரிழப்பதாக உறவினர்கள் புகார்

அ.அருள்தாசன்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காததால் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதாக உறவினர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

இம்மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு 1240 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 800 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி இருக்கிறது.
இந்தப் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வருவதால் புதிதாக வரும் நோயாளிகளுக்கு படுக்கைகளை ஒதுக்குவதில் சிரமங்கள் உள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் பாதிப்பு அதிகமுள்ளவர்களையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவதால் நிலைமை மோசமாகிவருகிறது.

அவ்வாறு வருவோருக்கு உடனடியாக ஆக்சிஜன் கொடுக்க வேண்டியிருக்கும் நிலையில், அவர்களுக்கு ஆக்சிஜன் படுக்கைகளை உடனடியாக ஒதுக்க முடியாமல் மருத்துவமனை நிர்வாகம் திணறுகிறது.

இதனால் உடல்நிலை மோசமான நிலையில் இங்கு அழைத்துவரப்படும் நோயாளிகள் உயிரிழப்பதாக உறவினர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மருத்துவமனையில் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது.

இங்கு சிகிச்சைபெறும் கரோனா பாதிப்பு அதிகமுள்ள நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 6 டன்னுக்கும் அதிகமான திரவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது. பல்வேறு இடங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவருவதில் ஏற்படும் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பெரும் நெருக்கடியான நிலையும் மருத்துவமனையில் உருவாகி வருகிறது.

நேற்று 4 டன் ஆக்சிஜன் மட்டுமே இருந்த நிலையில், மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ திரவ இயக்க உந்தும வளாகத்திலிருந்து 3 டன் ஆக்சிஜன் இன்று மாலையில் கொண்டுவரப்பட்டு கொள்கலன்களில் நிரப்பப்பட்டன. ஸ்டெர்லைட் ஆக்சிஜனும் இன்று வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஆக்சிஜன் பற்றாக்குறையில் சிலர் உயிரிழந்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இதை மறுத்துள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயாளிகளை அழைத்து வருவதால் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. மருத்துவமனைக்கு அழைத்துவரப்படும் நோயாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆக்சிஜன் படுக்கை வசதி ஒதுக்கப்படுகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT