கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு, கண்காணிப்பாளர் கமலவாசனிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். 
தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையை சரி செய்துவிட்டு மற்ற இடங்களுக்கு வழங்கட்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

எஸ்.கோமதி விநாயகம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனைக் கொண்டு தமிழகத்தின் தேவையை சரி செய்துவிட்டு, மற்ற இடங்களுக்கு வழங்க வலியுறுத்தி வருகிறோம் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இன்று மாலை கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் வந்தனர்.

எம்.பி., மற்றும் அமைச்சர், சுகாதார இணை இயக்குநர் மருத்துவர் முருகவேல், துணை இயக்குநர் மருத்துவர் அனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் ஆகியோரிடம் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, ஆக்சிஜன் இருப்பு குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் கரோனா பரிசோதனை மற்றும் ஆலோசனை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அவர்களுடன் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ், நகராட்சி ஆணையாளர் ராஜாராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து அமைச்சர் பெ.கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறும்போது, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர் பணியிடங்கள் தேவைப்படுகிறது தெரியவந்தது. மேலும், கூடுதலாக முன்களப்பணியாளர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள், பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியார் கூடுதலாக பணியமர்த்த உள்ளோம்.

கரோனா கேர் சென்டர் இங்குள்ள 2 தனியார் கல்லூரிகளில் செயல்பட்டு வருகிறது. அதே போல் அனைத்து இடங்களிலும் கரோனா சிகிச்சை அளிக்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காய்ச்சல் வந்த முதல் நாளே மருத்துவர் சந்தித்து உரிய ஆலோசனை பெற்று, மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். காலம் தாழ்த்தி வருவதால், அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனைப் பிரித்து அனுப்புவது குறித்து உச்ச நீதிமன்றம் அமைத்த குழு முடிவெடுக்கும். இன்று முதன் முதலாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றார் அவர்.

பின்னர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழகத்துக்கு தான் முதலில் தர வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்தின் தேவை போக மற்றவர்களுக்கு வழங்க வேண்டும். ஏனென்றால் அனைத்துமே உயிர்கள் தான். அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. இங்குள்ள தேவையை சரி செய்து விட்டு, பின்னர் வேறு எங்கு வேண்டுமென்றாலும் கொண்டு செல்ல ஆட்சேபனை இல்லை,” என்றார்.

தொடர்ந்து கனிமொழி, கீதா ஜீவன் உள்ளிட்டோர் எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.

SCROLL FOR NEXT